“எங்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது” - கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் குற்றச்சாட்டு

“எங்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது” - கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் குற்றச்சாட்டு
Updated on
2 min read

விருதுநகர்: நல வாரியத்தில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ள நாடு முழுவதும் உள்ள வாரியங்களை இணைக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருவதாக கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் குற்றம்சாட்டினார்.

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் சார்பில் தொழிலாளர்கள் பதிவு குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் தலைமை வகித்து, வாரியத்தில் தொழிலாளர் பதிவு மற்றும் குறைகள் குறித்து கேட்டறித்தார். பின்னர், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் உள்பட 18 நல வாரியங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் மட்டும்தான் வாரியம் உள்ளது. மற்ற மாநிலங்களில் இல்லை. இந்த வாரியம் கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் முறையாக செயல்படாமல் இருந்ததால் வாரியத்தில் பதிவுபெற்ற மொத்தம் உள்ள 33 லட்சம் தொழிலாளர்களில் 20 லட்சம் தொழிலாளர்கள் வாரியத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். திமுக அரசு பொறுப்பேற்றபோது 13 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே வாரியத்தில் இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்களும், 18 வாரியங்களிலும் சுமார் 22 லட்சம் தொழிலாளர்களும் புதிதாக பதிவுபெற்றுள்ளார்கள். கடந்த 2 ஆண்டுகளில் நிதி உதவிகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன.

கட்டுமானத் தொழிலாளி வீடுகட்டிக்கொள்ள ரூ.4 லட்சம் இலவசமாக வழங்கப்படுகிறது. தீர்க்க முடியாத நோயாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரியில் தொழிலாளியின் குழந்தை படித்தால் அவர்களுக்கான விடுதி உள்பட முழு செலவையும் வாரியம் ஏற்கும். ஆனால், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய அரசு கலைக்கும் வகையில் நீட் தேர்வை கொண்டுவந்துள்ளது. நீட் தேர்வால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும். அப்போதுதான் சாமானியர்களின் பிள்ளைகளும் மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல முடியும்.

கடந்த 2 ஆண்டுகளில் கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தில் மட்டும் ரூ.500 கோடி அளவுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 4.5 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்றுள்ளனர். வரும் தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வேண்டும் என்று தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். உறுதியாக இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று இந்த ஆண்டு தீபாவளிக்கு தொழிலாளர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் வழங்க முயற்சிப்பேன்.

கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் உள்ளது. ஆனால், இந்தப் பணத்தை எடுத்துக்கொள்ள நாடு முழுவதும் உள்ள வாரியத்தை இணைக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது. தமிழக அரசு மட்டும்தான் தமிழக சட்டத்தின்கீழ் வாரியம் இயங்கும் என்ற முடிவை எடுத்துள்ளோம். அதற்கு முதல்வர் பெரிய உதவி செய்துள்ளார். 5 மாதங்களாக ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை என்ற புகார் வந்தது. அது சரிசெய்யப்படும். ஒரு மாதத்திற்குள் ஓய்வூதியம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in