

தென்காசி: தென் கேரள பகுதிகளில் கடல் வெப்பநிலை குறைவாக இருப்பதால் மேகங்கள் உருவாக சாதகமான சூழல் இல்லை. இதனால் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனது தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. ஆனால் மழை தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
குற்றாலம் அருவிகள் வறண்டு வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகளும், குற்றாலத்தில் உள்ள வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாட்டி வதைக்கும் வெயிலால் பயிர்கள் வாடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடையாமல் தொடர்ந்து ஏமாற்றம் அளிப்பது ஏன் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா கூறியதாவது: தென்மேற்கு பருவமழை இப்போது தீவிரம் அடைய வாய்ப்பு இல்லை. ஜூன் 1 முதல் இப்போது வரை தென்காசி மாவட்டத்தில் 113 மி.மீ. மழை என்பது இயல்பான அளவு. இந்த ஆண்டில் ஜூன் 1 முதல் இதுவரை 115 மி.மீ. மழை பெய்துள்ளது.
இயல்பான அளவுக்கு மழைப் பதிவு இருந்தாலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் மட்டுமே சராசரி அளவு மழை பெய்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. மழை பற்றாக்குறை நிலைதான் அந்த பகுதிகளில் உள்ளது.
வெப்ப நிலை உயர்வு: எல்நினோ தாக்கம் காரணமாக வெப்பநிலை உயர்ந்து வருவது தென்மேற்கு பருவமழைக்கு பாதகமாக உள்ளது. கோடை காலத்தைப்போல் வெயில் அதிகரித்து வருகிறது. தென் கேரள பகுதிகளில் மழை பெய்தால்தான் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இருக்கும்.
இந்த ஆண்டு தென் கேரள பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதுவும் தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததற்கு காரணமாக உள்ளது. தென் கேரள பகுதிகளில் கடல் வெப்பநிலை குறைவாக இருப்பதால் மேகங்கள் உருவாக சாதகமான சூழல் இல்லை. இதனால் தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போனது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் தென்மேற்கு பருவ மழைக் காலமாகும். தென்காசி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் மழை பற்றாக்குறையாக இருந்தது. ஜூலை மாதத்தில் 2 வாரம் மழை நன்றாக பெய்ததால் இயல்பான அளவை பெற்றது. ஆகஸ்ட் மாதத்தில் மழை பற்றாக்குறை நிலையாக உள்ளது.
ஆகஸ்ட் 31 வரை தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு இல்லை. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். குற்றாலத்திலும் அருவிகளில் போதிய நீர் வரத்து இருக்காது.
செப்டம்பரில் மழை பெய்யும்: செப்டம்பர் மாதத்தில் வலுவான தென்மேற்கு பருவமழையை தென்காசி மாவட்டத்தில் எதிர்பார்க்கலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 123 ஆண்டுகால வரலாற்றில் கண்டிராத அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலும் இனி செப்டம்பர் மாதத்தில்தான் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்க்கலாம்” என்றார்.