Published : 22 Aug 2023 01:51 PM
Last Updated : 22 Aug 2023 01:51 PM

‘ஊர் என்பதா, உயிர் என்பதா?’ - முதல்வர் ஸ்டாலின் சென்னை தின வாழ்த்து

“தி இந்து” குழுமத்தின் ஆவண காப்பகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சென்னை நகரின் புகைப்படத் தொகுப்புகளைக் கொண்ட புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னை: "கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா - ஊர் என்பதா - உயிர் என்பதா சென்னையை?" என்று சென்னை தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா - ஊர் என்பதா - உயிர் என்பதா சென்னையை? சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்! வாழிய வள்ளலார் சொன்ன 'தருமமிகு சென்னை'!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 384-வது சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (ஆக.22) பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில், சென்னை பள்ளி மாணவர்களின் “அக்கம் பக்கம்” என்ற புகைப்படக் கண்காட்சியையும், “தி இந்து” குழுமத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினையும் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

சென்னை தின வரலாறு: சென்னை தினம் என்பது தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்புமிக்க நாளாகும். இந்நாள் 2004-ம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.

பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம். முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மாநகராட்சி, சென்னை மாநகராட்சியாகும்.

“அக்கம் பக்கம்” - சென்னை தினக் கொண்டாட்டத்தில் முதல்வர், சென்னை பள்ளி மாணவர்களின் “அக்கம் பக்கம்” என்ற புகைப்படக் கண்காட்சியினைத் திறந்து வைத்துப் பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, அவர்களை பாராட்டி வாழ்த்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சென்னை போட்டோ பினாலே அறக்கட்டளையின் மூலம் ஐபோன்களைப் பயன்படுத்தி ஆறு மாதக் கால புகைப்படப் பட்டறைகள் புளியந்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி, பெரம்பூர் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நுங்கம்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் நடத்தப்பட்டது.

சென்னை தினத்தை முன்னிட்டு, சென்னை போட்டோ பினாலே அறக்கட்டளையானது, புகைப்படம் எடுப்பதை ஒரு நடைமுறையாகவும், கலையாகவும் ஊக்குவித்து கொண்டாடுகிறது. லென்ஸ் வழி கல்வித்திட்டம் மற்றும் இடைநிலை நிகழ்வுகள் மூலமாக ஆர்வத்தை தூண்டி, சுய வெளிப்பாடு மற்றும் பிரதிபலிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சமூகத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

மெட்ராஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'அக்கம் பக்கம்' என்கிற தலைப்பில் நடைபெறும் கண்காட்சியில் இடம்பெறும் புகைப்படங்கள் சென்னை பள்ளி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு புகைப்படமும் மாணவர்களின் வாழ்க்கையை உள்ளடக்கி உள்ளவாறு பிரதிபலிக்கும் கண்ணோட்டங்களாக அமைந்துள்ளன.

பள்ளி வளாகங்களுக்குள் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில் இடம்பெறும் சூரிய ஒளியால் நனைக்கப்பட்ட தாழ்வாரங்கள், பூனைகள் மற்றும் காகங்கள், வண்ணங்களை தெளிக்கும் மிதிவண்டிகள் மற்றும் பள்ளிப் பைகள், விளையாட்டுக்கள் நிறைந்த பொழுதுபோக்குகளில் கண்ணிமைக்கும் நொடியில் ஊஞ்சலாடும் சில கணங்கள், பாட வகுப்புகளுக்கு இடையே ஒளிந்திருக்கும் சிரிப்புகளும், அக்கறைகளும் நிறைந்த காட்சிகள் ஓவியங்களாக தீட்டப்பட்டு இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளுக்கு வெளியே நடத்தப்பட்ட 'போட்டோ வாக்கில்', மாணவர்கள், சமூகத்தின் தறியில் பின்னிப்பிணைந்த மக்கள், பரபரப்பாக நடைபோடும் பாதசாரிகள், சன்னல்களின் வழியே தலை சாய்த்துப் பார்க்கும் பிள்ளைகள், தன் பணிகளுக்கு நடுவே டீக்கடைகளின் வாசலில் ஓய்வு எடுக்க வந்த கடை உரிமையாளர்கள், புகைப்படக் கலைஞர்களின் கண்ணைப் பறிக்கும் பூ வியாபாரிகள் போன்றவர்களின் உருவங்களும் உணர்ச்சிகளும் படம் பிடிக்கப்பட்டு இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் குழந்தைகளின் கண் வழியே தோன்றியுள்ள சென்னை மாநகரத்தின் வாழ்க்கையானது காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் கண்டுகளித்து மாணவர்களைப் பாராட்டினார்.

மூன்று புத்தகங்களை வெளியிடுதல்: தமிழக முதல்வர் “தி இந்து” குழுமத்தின் ஆவண காப்பகத்தில் இருந்து செறிவாக தேர்வு செய்யப்பட்ட சென்னை நகரின் புகைப்படத் தொகுப்புகளைக் கொண்ட புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

தொடர்ந்து, முதல்வர், “தி இந்து” குழுமத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'எபிக் சாகா ஆப் தி சோழாஸ்', 'தமிழ்நாடு இன் ஃபோக்கஸ்: கல்ச்சர் அண்ட் சொசைட்டி; பாலிடிக்ஸ் அண்ட் கவர்னன்ஸ்' மற்றும் 'பயணியர்ஸ் - ஸ்டார்ஸ் இன் தி மெட்ராஸ் கேலக்ஸி’ ஆகிய மூன்று புத்தகங்களை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன், துணை மேயர் மு. மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், தி இந்து குழுமத்தின் தலைவர் நிர்மலா லஷ்மண், இயக்குநர்கள் என். ராம், என். முரளி, என். ரவி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x