

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளியில் போதிய மழையின்மை மற்றும் குறைந்தழுத்த மின் விநியோகம் காரணமாக குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து வயல்களில் ஊற்றி பயிர்களைக் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரங்களில் உள்ள கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மேலும், இப்பகுதி விவசாயிகள் கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மழையை நம்பி மானாவாரி நிலங்களிலும் சில விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது மழை இல்லாததால் பயிர்களைக் காக்க அதிக அளவில் நீர் பாய்ச்சும் நிலையுள்ளது. இந்நிலையில், வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், சிகரமானப்பள்ளி, பண்ணப்பள்ளி, மாணவரனப்பள்ளி, நேரலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்தழுத்த மின் விநியோகம் காரணமாக விளை நிலங்களில் மின் மோட்டாரை இயக்க முடியாத நிலை நிலவி வருகிறது.
தொடரும் இப்பிரச்சினையால், வாடி வரும் பயிர்களைக் காக்கவும், நிலத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யவும் இப்பகுதி விவசாயிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து ராகி உள்ளிட்ட பயிர்களுக்கு ஊற்றி பயிர்களைக் காத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தொடர் மின்வெட்டு, குறைந்தழுத்த மின் விநியோகம் காரணமாக விளை நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது 5 மணி நேரத்துக்கும் மேல் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும், மின் விநியோகம் இருக்கும்போது குறைந்தழுத்த மின்சாரம் கிடைக்கிறது. இதனால், மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை.
இதனால், குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றி பயிர்களைக் காத்து வருகிறோம். இதேநிலை நீடித்தால், மகசூல் பாதிப்பும், வருவாய் இழப்பும் ஏற்படும். எனவே, விவசாய விளை நிலப் பகுதிக்குச் சீரான மற்றும் உயரழுத்த மின் விநியோகத்துக்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக மின்வாரிய அலுவலர்களிடம் கேட்ட போது, “மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் விவசாய பயன்பாட்டுக்கான மின் தேவை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதனால் மின் அழுத்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இதைச் சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்றனர்.