அண்ணாமலையின் முதல்கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவு: 22 நாட்களில் 41 தொகுதிகளுக்கு சென்றுள்ளார்

அண்ணாமலையின் முதல்கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவு: 22 நாட்களில் 41 தொகுதிகளுக்கு சென்றுள்ளார்

Published on

சென்னை: அண்ணாமலையின் முதல்கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவடைகிறது. அந்தவகையில், 22 நாட்களில் 41 தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த, ஜூலை 28-ம் தேதி ராமேசுவரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தனது நடைபயணத்தை அண்ணாமலை நிறைவு செய்துள்ளார்.

தற்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபயணத்தை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, தனது முதல்கட்ட நடைபயணத்தை இன்றுடன் நிறைவு செய்கிறார். முதல் கட்டமாக 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை, 41 தொகுதிகளில் மக்களைச் சந்தித்துள்ளார்.

இன்று மாலை திருநெல்வேலி டவுன் வாகையடி முக்கு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகிறார். இக்கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவும் கலந்துகொண்டு, மத்திய பாஜக அரசின் சாதனைகள் குறித்து உரையாற்றுகிறார்.

முதல்கட்ட நடைபயணம் நிறைவடைந்து சென்னை திரும்பும் அண்ணாமலை, செப்.2 வரை கட்சிப் பணிகளில் முழு கவனம் செலுத்துகிறார். பிறகு செப்.3-ம் தேதி ஆலங்குளத்தில் தனது 2-ம் கட்ட நடைபயணத்தை அண்ணாமலை தொடங்க இருக்கிறார் என பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in