

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தரமான மருத்துவ சேவை கிடைப்பதையும், சுகாதாரமான சூழல் நிலவுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும், சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: மருத்துவமனைகளின் தூய்மையை உறுதிசெய்வது தொடர்பாக, சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, மருத்துவமனைகளில் படுக்கைகள், கட்டில்கள் சீராக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், தலையணைகள், படுக்கைகள் ஆகியவை சேதமின்றி, தூய்மையாக இருப்பதுஅவசியம். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை தினமும் சலவை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட செவிலியர்கள், தலைமைசெவிலியர்கள் இதை உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்து சிகிச்சைப் பிரிவுகளையும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்துவது மிக முக்கியமாகும். குறிப்பாக, கழிப்பறைகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மருத்துவர்கள், நிலைய மருத்துவ அலுவலர், கண்காணிப்பாளர், டீன், இயக்குநர் என அனைத்து நிலையில் உள்ளவர்களும், இவற்றை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
அதேபோல, சுகாதாரமான குடிநீர், உரிய நேரத்தில் தரமான உணவு, மருத்துவமனை வளாகத் தூய்மைப் பணி ஆகியவற்றில் எந்த சமரசமும் கூடாது.
குறிப்பாக, சமையல் கூடங்களில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு, உணவுப் பொருள்களின் தரத்தை உறுதிசெய்ய வேண்டும். மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளை கண்ணியமாக நடத்தி, அவர்களுக்கு உரிய சேவைகளை வழங்குவது அவசியம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சுகாதாரமான சூழல் நிலவுவதையும், தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.