

சென்னை: சென்னை தாம்பரம் - சானடோரியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 200 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளாஉள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
தினமும் 2,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது மட்டுமில்லாமல், சித்த மருத்துவ ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. 8 சித்த மருத்துவத் துறைகளில் எம்டி சித்தா மேற்படிப்பும், 6 துறைகளில் பிஎச்டி சித்த மருத்துவ ஆராய்ச்சி படிப்பும், இளநிலை சித்த மருத்துவப் படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த மருத்துவமனை வளாகத்தில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் அமைந்துள்ளது. மேலும்மூலிகை, தாது மருந்துகளுக்கான சூரணம், பற்பம், செந்தூரம் முதலியவற்றுக்கான தர நிர்ணயகருவிகள் அடங்கிய ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநராகவும், மத்தியசித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் இருக்கும் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி ஆய்வகத்தை நேற்று திறந்துவைத்தார். அப்போது மருத்துவர்கள் ஜி.செந்தில்வேல், எ.மாரியப்பன், மீனாட்சி சுந்தரம், ஜி.பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.