Published : 22 Aug 2023 06:12 AM
Last Updated : 22 Aug 2023 06:12 AM
சென்னை: ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், வசதியான பயணத்துக்காகவும் சாதாரண பெட்டிகளுக்கு பதிலாக, எல்எச்பி எனும் நவீன பெட்டிகளை உற்பத்திசெய்ய ரயில்வே வாரியம் கடந்த 2016-ம் ஆண்டு கொள்கை முடிவுஎடுத்தது. இதைத் தொடர்ந்து,எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, விரைவு ரயில்களில் இணைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு முறை பயணம் முடிந்த பிறகும், பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரயில்கள் சுத்தம் செய்யப்படும். பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பான பணிகளுக்காக ஒரு நாளுக்கு 1.84 லட்சம் லிட்டர் டீசல் நுகரப்பட்டது. இதனால், ஆண்டுக்கு ரூ.668 கோடிக்கு மேல்செலவானது.
இதையடுத்து, எல்எச்பி பெட்டிகளை பரிசோதிக்கவும், பராமரிக்கவும் 750 வோல்டேஜ் மின்சாரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.210 கோடி செலவிடப்பட்டது.இதன்காரணமாக, பிட்லைன்களில் எல்எச்பி பெட்டிகளை பராமரிப்பதற்கான செலவில் ரூ.500 கோடிக்கு மேல் சேமிக்கப்படுகிறது.
இதேபோல, தெற்கு ரயில்வேயில் எல்எச்பி பெட்டிகளை பராமரிக்க, 750 வோல்டேஜ் மின்சார வசதியுடன் பிட்லைன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “தெற்கு ரயில்வேயில் 45 பிட்லைன் அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதுவரை சென்னை பேசின் பாலம் பணிமனையில் 14, எழும்பூர் கோபால்சாமி நகர் - 3, தாம்பரம் - 2, மதுரை - 4, திருநெல்வேலி - 3, நாகர்கோவில் - 3, கோயம்புத்தூர் - 2, திருச்சி - 2 உட்பட41 பிட்லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு 750 வோல்டேஜ் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எல்எச்பி பெட்டிகள் பராமரிப்பு செலவில், கடந்த ஜனவரி முதல் இதுவரை ரூ.94.13 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 4 பிட்லைன்கள் விரைவில் அமைக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT