

சென்னை: மாநகராட்சி தொடக்கப் பள்ளி கட்டிட தூணில் சிமென்ட் பூச்சுபெயர்ந்து விழுந்ததைத் தொடர்ந்து, பள்ளியை உடனடியாக சீரமைத்துத் தர வலியுறுத்தி அப்பள்ளி மாணவர்கள், பெற்றோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கே.கே.நகர் நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில், சென்னை மாநகராட்சியின் தொடக்கப் பள்ளி 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளிக் கட்டிடம் 3 மாடிகளைக் கொண்டது. இக்கட்டிடத்தின் தூணில் கடந்த 2019-ம் ஆண்டு விரிசல் விட ஆரம்பித்தாக கூறப்படுகிறது. பின்னர் 2020-ல் கட்டிடம் பழுதுபார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் கட்டிடத்தின் தூண்களில் ஆங்காங்கே விரிசல் விட ஆரம்பித்தது.
இந்நிலையில் நேற்று காலை, பள்ளிக் கட்டிடத்தின் தூணிலிருந்து சிமென்ட் பூச்சு உடைந்து கீழே விழுந்தது. அதேபோல கூரை பகுதியிலும் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அப்போது பள்ளிக்கு வந்த மாணவர்கள் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து கட்டிடங்களை விட்டு உடனடியாக வெளியேறினர்.
இத்தகவல் அறிந்து வந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர், பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். பள்ளிக் கட்டிடத்தை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பள்ளிக் கட்டிடம் விரைவில் சீரமைக்கப்படும் என்றும், மாணவர்கள் தற்காலிகமாக மாற்றுப் பள்ளியில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு மாணவர்கள் கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தையொட்டி மாநகராட்சி பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.