சென்னையில் குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிய ‘டிஜிட்டல்’ கண்காணிப்பு வளையத்துக்குள் 3,500 ரவுடிகள்

சென்னையில் குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிய ‘டிஜிட்டல்’ கண்காணிப்பு வளையத்துக்குள் 3,500 ரவுடிகள்
Updated on
1 min read

சென்னை: குற்றச் செயல்களை முன் கூட்டியேகண்டறிந்து தடுக்கும் வகையில், சென்னையில் 3,500 ரவுடிகள் டிஜிட்டல் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன்படி, பெரிய தாதாக்கள் ‘ஏ பிளஸ்’ பட்டியலிலும், கூலிக்கு கொலை செய்யும் ரவுடிகள் ‘ஏ’ பிரிவிலும், அடிதடி, மாமூல் வசூலிப்பில் ஈடுபடும் ரவுடிகள் ‘பி’பிரிவிலும், கொலை முயற்சி, தகராறில் ஈடுபடுவோர் ‘சி’ பிரிவுபட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளனர். திருந்தி வாழும் ரவுடிகள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்களின் நடமாட்டம் தனிப்படைபோலீஸாரால் கண்காணிக்கப்படுகிறது.

சமீபகாலமாக புதிய ரவுடி கும்பல், கூலிப்படைகளின் நடமாட்டம், பணத்துக்காக குற்றச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள், இளம் சிறார்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இவர்களால் சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் சிறிய, பெரிய குற்றங்களும் அடிக்கடி அரங்கேறி வருவது போலீஸாருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

ரவுடிகள் தங்களுக்குள் எல்லை வகுத்து கொலை, ஆள் கடத்தல், மாமூல் வசூலிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். போலீஸாரின் தொடர் நடவடிக்கையால் அவர்களின் குற்ற விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க சட்ட விரோத செயல் மற்றும் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கவும், தாதாக்களின் அராஜகத்தை ஒழிக்கவும், ஒட்டு மொத்த ரவுடிகளின் பட்டியலை சென்னை போலீஸார் தயாரித்துள்ளனர்.

அதன்படி 3,500 ரவுடிகளின் பெயர், வயது, முகவரி, குற்றங்களின் எண்ணிக்கை, யாருடைய கூட்டாளி, யாருக்கு எதிரானவர், செல்போன் எண், பின்னணி, குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் புகைப்படங்களுடன் சேகரிக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அவர்களின் நடவடிக்கைகளை சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு போலீஸார் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். 24 மணி நேரமும் ரவுடிகளின் நடமாட்டத்தை உளவுப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு, ரவுடி ஒழிப்பு பிரிவுஉட்பட மேலும் சில பிரிவு போலீஸாரும் கண்காணிக்கின்றனர்.

ஒரு ரவுடி மற்றொரு ரவுடி அல்லது கூட்டாளியைத் தொடர்பு கொண்டால் உடனடியாக அதைஅறிந்து கொள்கின்றனர். இதற்குதொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கூலிப்படை தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவோரை முன்கூட்டியே கண்டறிந்து குற்றங்களைத் தடுக்க முடியும் என போலீஸார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அதே நேரம், போலீஸாரின் கண்காணிப்பு வளையத்தையும் மீறி கடந்த வெள்ளிக்கிழமை பட்டினப்பாக்கத்தில் ‘ஏ பிளஸ்’ பட்டியலில் இருந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் தீர்த்துக் கட்டப்பட்டது எப்படி? இதில், கோட்டைவிட்ட போலீஸார் யார் எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in