Published : 28 Dec 2017 12:13 PM
Last Updated : 28 Dec 2017 12:13 PM

காது கேட்காத குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி மையம்: தென் தமிழகத்தில் முதல் முறையாக ராஜாஜி மருத்துவமனையில் தொடக்கம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவில் தென் தமிழகத்திலேயே முதல் முறையாக காது கேட்காத குழந்தைகளுக்கான சிறப்பு பேச்சுப்பயிற்சி அளிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவில் காது கேட்காத குழந்தைகளுக்கான உயர் தர ‘காக்ளியர் இம்ப்ளாண்ட்’ அறுவை சிகிச்சை வசதி முன்பு இல்லை. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ள ரூ.7 லட்சம் செலவாகும். இதனால், ஏழை, நடுத்தர மக்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டில் ராஜாஜி மருத்துவமனையில் ‘காக்ளியர் இம்ப்ளாண்ட்’ அறுவை சிகிச்சை வசதி தொடங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் 6 வயதுக்கு உட்பட்ட 50 குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 50 குழந்தைகளும் தற்போது நல்ல முறையில் காது கேட்கும் திறனையும், பேசும் திறனையும் பெற்றுள்ளனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட இந்த குழந்தைகளுக்கு பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கும் வசதி இம்மருத்துவமனையில் இல்லாததால், அரசு செலவில் தனியார் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இந்நிலையில், தென் தமிழகத்திலேயே முதல் முறையாக ராஜாஜி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவில் ‘காக்ளியர் இம்ப்ளாண்ட்’ அறுவை சிகிச்சை செய்து கொண்ட 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பேச்சு பயிற்சி வழங்கும் மையம் (Audio verbal therapy centre) நேற்று தொடங்கப்பட்டது. இந்த மையத்தை மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவின் சிறப்பு பேச்சு மருத்துவ நிபுணர் கார்த்திகேயன் கூறியதாவது: காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் 6 வயதுக்குள் ‘காக்ளியர் இம்ப்ளாண்ட்’ அறுவை சிகிச்சை செய்து கொண்டால் மட்டுமே பேச்சுத்திறனை பெறுவார்கள்.

28MAKRISH_SPEECH_1 பேச்சுப்பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஸ்பீச் பிராசெஸர் கருவி.

இந்த அறுவை சிகிச்சையில் காது கேட்கும் திறன் அளிக்கும் செவி சுருளுக்குள் காது கேட்கும் கருவி நுட்பமான முறையில் பொருத்தப்படும். வெளியே இந்த கருவி தெரியாது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பின், குழந்தைகளுக்கு மற்றவர்கள் பேசுவதை கேட்டு பேச வைக்க பேச்சுத்திறன் பயிற்சி அளிக்க வேண்டும். நாம் பேசும்போது எழுப்பும் ஒலி, குழந்தையின் மூளையில் பதிய வைப்பதற்காக இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக ஸ்பீச் பிராசெஸர் (Speech Processor) என்ற பேச்சு கருவி காதிற்கு வெளியே பொருத்தி பேச்சுப்பயிற்சி வழங்கப்படுகிறது

ராஜாஜி மருத்துவமனை காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவில் வாரத்தில் இரண்டு நாள் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக சமீபத்தில் காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை செய்த 11 குழந்தைகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x