குரூப்-1 தேர்வில் 1,045 பேரின் விண்ணப்பங்களை நிராகரித்தது டிஎன்பிஎஸ்சி

குரூப்-1 தேர்வில் 1,045 பேரின் விண்ணப்பங்களை நிராகரித்தது டிஎன்பிஎஸ்சி

Published on

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 1,045 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு கடந்துவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆகிய பதவிகளில் 79 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத்தேர்வு வருகிற 20-ம் தேதி நடத்தப்படுகிறது.

தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளம் (www.tnpsc.gov.in) மூலம் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதற்கிடையே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 1,045 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குருப்-1 தேர்வெழுத வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 என்றும், இதர பிரிவினர்கள் அனைவருக்கும் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வயது வரம்பு கடந்துவிட்ட காரணத்தினால் 1,036 பேரின் விண்ணப்பங்களையும், 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் மத்திய-மாநில அரசு பணியில் இருப்பவர்கள் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற விதியின் அடிப்படையில் 9 பேரின் விண்ணப்பங்களையும் டிஎன்பிஎஸ்சி நிராகரித்துள்ளது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in