

சமூகப் பணிகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் 25 பேருக்கு தலா ரூ. 40 ஆயிரம் ரொக்கத்துடன், விருது வழங்கப்படவுள்ளது என்றார் ஆட்சியர் ந. வெங்கடாசலம்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை:
ஆண்டுதோறும் (ஜன. 12) சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி, தேசிய அளவிலான இளைஞர் விழாவில், அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை செய்து வரும் இளைஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன அமைப்புகளுக்கு தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதை பெறும் இளைஞர்கள் 13 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நித ஆதாயம் பெறப்படாமல், தன்னார்வ அடிப்படையில் தொண்டு செய்திருக்க வேண்டும். ஏற்கெனவே விருது பெற்றவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. மத்திய, மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் பணிபுரிவோர் விண்ணப்பிக்க இயலாது. தொண்டு நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் தொண்டு பணிகள் செய்திருக்கக் கூடாது. சாதி, மத அடிப்படையில் செயல்பட்டிருக்கக் கூடாது. சமுதாயப் பணிகளில் ஈடுபட்ட செய்திக்குறிப்பு, புகைப்படங்கள் உள்ளிட்ட தகுந்த ஆதாரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று, நிறைவு செய்து இந்த மாதம் இறுதிக்குள் அளிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் 25 பேருக்கு ரூ. 40 ஆயிரம் ரொக்கம், விருது வழங்கப்படும். தொண்டு நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம் ரொக்கம், சான்றிதழ் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.