Published : 16 Dec 2017 10:39 AM
Last Updated : 16 Dec 2017 10:39 AM

வரி ஏய்ப்பு வழக்கு நடவடிக்கைகளை தடுக்க தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும்: வருமான வரித்துறை அறிவுறுத்தல்

வரி ஏய்ப்பு வழக்கு நடவடிக்கைகளைத் தடுக்க தானாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நம் நாட்டின் மொத்த நேரடி வரி வருவாய் வசூலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை 4-ம் இடத்தை வகிக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேற்கண்ட மண்டலத்தில் வருமான வரித்துறை வரி செலுத்துவோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சட்ட அமலாக்கம் மற் றும் வலுவான தடுப்பு முறைகளால் தன்னிச்சையான வரி செலுத்துதல் என்ற நிலையை ஏற்படுத்த முனைகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை வரி ஏய்ப்பு தடுப்புமுறைகளாக வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக, சில வழக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, வருமானவரிப் படிவம் தாக்கல் செய்யாதது தொடர்ப்பாக 191 வழக்குகள், வரி ஏய்ப்பு மற்றும் வரி செலுத்தாமை தொடர்பாக 58 வழக்குகள், முறையாக வரி பிடித்தம் செய்யாமை மற்றும் பிடித்த வரியை செலுத்தாமை தொடர்பாக 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருமானவரித்துறை இது போன்ற குற்றங்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதில் உறுதி பூண்டுள்ளது.

நிலுவையில் உள்ள வரி, வட்டி மற்றும் அபராதத் தொகை வசூல் தொடர்பாக, வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக வருமான வரித்துறை துறை சொத்துக்களைக் கைப்பற்றுதல் போன்ற கடும் நடவடிக்கைகளை 98 வழக்குகளில் எடுத்துள்ளது. மேலும், சூழ்நிலைக்கேற்ப பிணை சொத்துகளை ஏலம் விடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தன்னிச்சையாக வரி செலுத்துதல் என்ற நிலையை ஏற்படுத்த வருமான வரித்துறை ஏற்கனவே வருமானவரிப் படிவம் தாக்கல் செய்து, இப்போது தாக்கல் செய்யாத அனைத்து வரி செலுத்துவோருக்கும் கடிதம் மூலம், மதிப்பீட்டு ஆண்டு 2016-17 (நிதியாண்டு 2015-16) மற்றும் மதிப்பீட்டு ஆண்டு 2017-18-க்கான (நிதியாண்டு 2016-17) வருமானவரிப் படிவம் தாக்கல் செய்ய 2018, மார்ச் 31, வரை மட்டுமே காலக்கெடு உள்ளது.

வருமானவரிச் சட்டம் 139(1)-ன் கீழ் உள்ள காலக்கெடுவுக்குள் வருமானவரிப் படிவம் தாக்கல் செய்யாதவர்கள், அக்குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டு முடிந்த பின் வருமானவரிப் படிவம் தாக்கல் செய்ய இயலாது. இதற்காக, 1961-ம் ஆண்டு வருமானவரிச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

எனவே, வரி செலுத்துபவர்களின் தன்னிச்சையான வரி செலுத்தும் போக்கை ஊக்குவிக்கும் வகையில் வருமானவரித் துறை கோரிக்கை விடுக்கிறது. தன்னிச்சையாக வரி செலுத்துதல் மூலம் மேற்கூறிய நடவடிக்கைகளைத் தவிர்க்க முடியும். இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x