Published : 20 Dec 2017 10:21 AM
Last Updated : 20 Dec 2017 10:21 AM

ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் மகள் வீட்டில் கொள்ளை என புகார்: உதவி ஆணையர் தலைமையில் விசாரணை

ராமநாதபுரம் சமஸ்தான மன்னரின் மகள் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகார் குறித்து உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

சென்னை தேனாம்பேட்டை கணபதி காலனியில் வசிப்பவர் கார்த்திக் சேதுபதி (38). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி கனகமதி மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனுவை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எனது தாயார் விஜயா நாச்சியார், ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் சண்முகராஜேஸ்வர நாகநாத சேதுபதியின் மகள். விஜயா நாச்சியார் திருமணம் செய்துகொள்ளவில்லை. 1992-ம் ஆண்டு அவர் என்னை தத்தெடுத்தார். என்னை தத்தெடுத்ததை 2013-ம் ஆண்டு சட்டப்படி பதிவு செய்தார்.

இதனால் நானும், ராமநாதபுரம் சமஸ்தான வாரிசு ஆனேன். ஆனால், ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த மற்றவர்கள், என்னை வாரிசாக ஏற்கவில்லை. 2016-ம் ஆண்டு விஜயா நாச்சியார் இறந்து விட்டார்.

அதன் பின்னர் சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள் எனக்கு பல வகைகளிலும் தொல்லை கொடுத்தனர். கடந்த 12-ம் தேதி, அவர்கள் என்னை நெல்லைக்கு அழைத்தனர். அங்கு ஓர் ஓட்டலில் என்னை 3 நாட்கள் சிறை வைத்து அடித்து உதைத்து தாக்கினார்கள். வெற்று தாள்களில் கையெழுத்து வாங்கினார்கள்.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ரவுடி ஒருவர், நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது மனைவியை மிரட்டி ரூ.33 கோடி மதிப்புள்ள தங்க-வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டதன் பேரில், தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் முத்தழகு தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

பொய்யான தகவல்

இந்நிலையில் கார்த்திக் சேது பதி கூறியிருப்பது பொய்யான தகவல் என்று ராமநாதபுரம் சமஸ் தான வாரிசு ராஜா குமரன் சேதுபதி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: எனது அத்தை விஜயா நாச்சியார் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் சமூக நலத்துறையில் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னையில் வசித்து வந்த அவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது உடல் ராமநாதபுரம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது வாரிசு எனக்கூறி கார்த் திக் சேதுபதி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத் தில் பொய் புகார் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் அருகே கவிதைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் எனது அத்தை விஜயா நாச்சியார் வீட்டில் வேலைக்காரராக இருந்தவர். அவர் தனது பெயருடன் சேதுபதி என சேர்த்திருப்பதே தவறு. போலி ஆவணங்களை தயாரித்து வைத்துக் கொண்டு வாரிசு எனக்கூறி வருகிறார்.

அவருக்கும் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும், நகைகளை திருடிச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது முற்றிலும் பொய். எங்களது சமஸ்தானத்தின் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ள அவர் மீது, மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x