

மதுரை: “எனது கனவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தேமுதிக தொண்டர்களுக்கென வேலை செய்கிறேன்” என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், இளைய மகன் சண்முகபாண்டியன் ஆகிய இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து விஜயபிரபாகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “விருதுநகரில் குலதெய்வ வழிபாடு முடித்துவிட்டு மீனாட்சி அம்மனையும் தரிசித்தோம். பொதுச் செயலாளர் விஜயகாந்தின் உடல் நலம் சற்று பின்னடைவு தான் என்றாலும், அவர் 100 வயதுக்கு மேல் நன்றாக இருப்பார். இருப்பினும், பழையபடி பேசுவார், எழுந்து வருவார் என்பதற்கான முயற்சிகளை செய்கிறோம். உங்களை போன்று, நாங்களும் நம்புகிறோம். அவர் நலமாக உள்ளார்.
கேப்டனின் மந்திரமே ‘முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது’ என சொல்லுவார். அதுதான் எங்களது தாரக மந்திரமாக எடுத்துள்ளோம். எனது கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்களுக்காக ஓடோடி வந்து வேலை செய்கிறேன்.
அதிமுக கட்சிக்குள் குழப்பம் இருக்கிறது. இதில் நான் பெருசா, நீ பெருசா என்பதை காட்டுவதற்காகவே இந்த மாநாடு என நான் பார்க்கிறேன். தேமுதிகவில் இருந்து மட்டும் பிற கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை. மற்ற பல கட்சியில் இருந்தும் சென்றுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டுத்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதிமுகவிலிருந்து திமுகவிற்கு சென்று தற்போது ஜெயிலுக்குப் போய் இருக்கிறார். தேமுதிகவில் மட்டும் மாற்றுக் கட்சிக்கு செல்கிறார் என்ற எண்ணத்தை மக்கள் மாற்ற வேண்டும். தேமுதிகவிலிருந்து பிற கட்சிக்கு செல்பவர்கள் காசு வாங்கிக்கொண்டு செல்கின்றனர் என சொன்னால் எப்படி அவர்களுக்கு மதிப்பு கிடைக்கும்.
இங்கு இருக்கும் போது, அண்ணி, தம்பி என கூறுவார்கள். வெளியே சென்றவுடன் அந்நியவாதியாக தெரியும். நீட் தேர்வு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ளது. இதனை அரசியல் ஆக்காமல் சரியான விஷயத்தை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை விட, பின் தங்கிய மாநிலங்களில் இறப்பு குறைவாக தான் உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என பொய்யான வாக்குறுதியை திமுக அரசு கூறுவதால் மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது” என்றார்.