அதிமுக மாநாடு அதிர்வுகள் முதல் சந்திரயான்-3 அப்டேட்ஸ் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.21, 2023

அதிமுக மாநாடு அதிர்வுகள் முதல் சந்திரயான்-3 அப்டேட்ஸ் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.21, 2023
Updated on
2 min read

தமிழகத்தில் கணினிமயமாகும் டாஸ்மாக் கடைகள்: "தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் கணினிமயமாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இரண்டொரு மாதங்களில் முடிக்கப்படும். 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. புதிதாக எங்கும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை" என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

“2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு மதுரை மாநாடே அடித்தளம்”: மதுரை மாநாட்டில் கிடைத்திட்ட வெற்றி, 2024-ல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வெற்றிக்கும், அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றிக்கும் அடித்தளமாக அமைந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அதிமுக மாநாட்டுக்கு வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 6 லடசம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதனிடையே, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த அதிமுக மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்களுக்காக தயார் செய்த உணவுகள் அண்டா, அண்டாவாக மாநாட்டு பந்தலிலே கீழே கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மதுரையில் ரூ.400 கோடி செலவழித்து ஆடம்பரமாக நடத்திய மாநாட்டால் யாருக்கும் பலனில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்தார்.

அதேபோல், அதிமுக மாநாடு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டம்: அன்புமணி வலியுறுத்தல்: காவிரி பிரச்சினையை கர்நாடக அரசின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாசாரம்: அண்ணாமலை: “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாசாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கிடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க புதிய அமர்வு: ஆகஸ்ட் மாதத்துக்கான காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க இன்றே ஒரு அமர்வினை அமைப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதி அளித்தார்.

சந்திரயான்-3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள்: நிலவின் சுற்று வட்டப்பாதையில் நிலவுக்கு மிக அருகில் பயணித்து வரும் சந்திரயான்-3-ன் லேண்டரை முறைப்படி வரவேற்றுள்ளது சந்திரயான்-2ன் ஆர்பிட்டர். இதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது. அந்த வகையில் ‘Welcome, buddy!’ என சந்திரயான்-3-ன் லேண்டருக்கு தகவல் அனுப்பி சந்திரயான்-2-ன் ஆர்பிட்டர் வரவேற்றுள்ளது. கடந்த 2019-ல் சந்திரயான்-2 லேண்டர் நிலவில் மோதிய காரணத்தால் அந்த முயற்சி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

16 வயத சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி கைது: தனது நண்பரின் 16 வயது மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த அரசு அதிகாரியை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமையும் கருக்கலைப்பும் - உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, அவருடைய 27 வார கர்ப்பத்தைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தனது கவனத்துக்குக் கொண்டுவந்த பின்னர் குஜராத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவை சுட்டிக்காட்டி கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தது. கூடவே, பாலியல் வன்கொடுமையால் உருவான கருவைச் சுமக்க எப்படி நிர்பந்திக்க முடியும் என்று காட்டமாக கேள்விகளை முன்வைத்துள்ளது.

4-ம் நிலை வீரர் - பிரச்சினையும் கங்குலி தரும் தீர்வும்!: 2019 உலகக் கோப்பைக்கு முன்பிருந்தே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 4-ம் நிலை வீரருக்கான தேடல் இந்திய அணியில் இருந்து வருகின்றது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறும் போது, “நம்பர் 4 என்பது வெறும் எண் தான். அதில் யாரும் இறங்க முடியும். யாரும் பிறவி தொடக்க வீரர், பிறவி 2, 3, 4-ம் நிலை வீரர் என்றெல்லாம் கிடையாது. நான் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டர் வீரனாகத்தான் நுழைந்தேன். என்னை தொடக்க வீரராக இறங்கச் சொன்னார் சச்சின் டெண்டுல்கர். ஏனென்றால், அவர் அப்போது கேப்டன். சச்சின் டெண்டுல்கரும் 6-ம் நிலையில் இறங்கியுள்ளார். ஆனால், தொடக்க வீரராக ஆனபிறகு உலகத்தரம் வாய்ந்த வீரர் ஆனார்" என்று தெரிவித்துள்ளார்.

பருவமழை பற்றாக்குறையால் பருப்பு விலை அதிகரிக்க வாய்ப்பு: விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த தக்காளி விலை சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் அடுத்தப் பிரச்சினையாக பருப்பு விலை ஏறக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in