

மதுரை: தமிழகம் முழுவதுமுள்ள 12,200 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதுமுள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் பன்முகத் திறமைகளை மேம்படுத்தும் வகையில் 12,200 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2010 முதல் தொடர்ந்து 13 கல்வியாண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.வாரத்தில் 3 அரை நாட்களும், மாதத்தில் 12 அரை நாட்களும் பணியாற்றி வருவதை மாற்றி முழுநேரப் பணியாக்கி, நிரந்தரம் செய்ய வேண்டும். மாத ஊதியம் ரூ.28 ஆயிரம், இஎஸ்ஐ, பிஎப், பணிப்பதிவேடு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் தேர்தல் அறிக்கையில் பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், அதனை கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும் முதல் கட்டமாக தமிழக முதல்வர், கல்வி அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி, திருவண்ணாமலை, மதுரை ஆகிய 3 இடங்களில் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அச்சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் ந.செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மா.சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் மாயகிருஷ்ணன், குமாரி, அண்ணாத்துரை, சீனிவாச கண்ணன், கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து ஆக. 28, செப்.4 தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், நிறைவேறாதபட்சத்தில் செப்.21 முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் 12,200 பகுதிநேர ஆசிரியர்களுடன் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.