

கரூர்: கரூரில் தமிழ்ப் பெண்ணுக்கு துருக்கி இளைஞருடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் மகள் ப்ரியங்கா. பி.டெக் பட்டதாரி. இவர் டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். துருக்கி நாட்டை சேர்ந்த எம்.டெக் பட்டதாரி அஹமத் கெமில் கயான் துருக்கி மற்றும் டெல்லியில் தொழில் செய்து வருகிறார். ப்ரியங்காவுக்கு, அஹமத் கெமிலுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.
இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு கரூர் பசுபதிபாளையம மணமகள் வீட்டில் எளிமையாக தமிழ் முறைப்படி இன்று (ஆக.21) திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை அழைப்பு, கன்னிகாதானம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன.
மணமகள் பட்டுப்புடவை அணிந்திருக்க, மணமகன் பட்டுவேட்டி, பட்டு சட்டை அணிந்து மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். தமிழ் தெரியாத மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒவ்வொரு நிகழ்வும் ஆங்கிலத்தில் விளக்கப்பட்டது. இதனை ஆச்சரியமாக கேட்டுக் கொண்ட அவர்கள் இதனை வீடியோவாகவும் பதிவு செய்துகொண்டனர்.