

மதுரை: மத்திய அரசு 3 சட்டங்களின் பெயரை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றம் செய்வதைக் கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் 3 சட்டத் திருத்தங்களை எதிர்த்தும், அந்த சட்டங்களில் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்ததை எதிர்த்தும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து இன்று ஆர்பாட்டம் நடத்தினர்.
இதற்கு மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்குமார், துணைத் தலைவர்கள் பாஸ்கர், சிவானந்தம், பொருளாளர் ராஜா மோகன், துணை செயலாளர் பாலமுருகன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் முத்து அமுத நாதன், மாவட்ட தலைவர் ராமசாமி மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மோகன்குமார் பேசுகையில், ''நூற்றாண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் உள்ளிட்ட 3 பிரதான சட்டங்களின் பெயர்கள் இந்தி, சமஸ்கிருத மொழியில் மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆக.23-ல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவர். அதன் பிறகும் சட்டத்திருத்தம் திரும்ப பெறப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.