காவிரி பிரச்சினை: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்
அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: காவிரி பிரச்சினையை கர்நாடக அரசின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் கர்நாடக அரசு திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஆணையத்தின் ஆணையை ரத்து செய்ய வேண்டும்; மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கர்நாடக அரசு, இன்னொருபுறம் கர்நாடகத்தின் பல பகுதிகளில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிராக போராட்டங்களையும் தூண்டி விட்டு வருகிறது. கர்நாடகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

கர்நாடகம் இவ்வாறு செய்வதன் நோக்கம் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிரான மனநிலையை உருவாக்குவது தான். இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக காவிரி சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் வரும் 23-ம் தேதி கர்நாடகம் கூட்டியிருக்கிறது. காவிரி பிரச்சினையை கர்நாடக அரசு திட்டமிட்டு அரசியலாக்கி வரும் நிலையில், இதை தமிழகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? தங்களின் நலன்களை எவ்வாறு காப்பாற்றப் போகிறது என்ற வினா தமிழகத்தில் உள்ள உழவர்கள் மனதில் எழுந்திருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற முடியுமா என்பதே தெரியவில்லை. சம்பா பருவம் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், காவிரியில் தண்ணீர் இல்லாததால் அது சாத்தியமாகுமா என்பதும் தெரியவில்லை. பெரும்பான்மையான உழவர்கள் சம்பா சாகுபடி செய்ய ஆர்வம் காட்டவில்லை என்பது தான் களநிலைமை ஆகும். அனைத்து நெருக்கடிகளையும் சமாளித்து, குறுவைப் பயிர்களை காப்பாற்றவும், சம்பா சாகுபடியை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நிறுத்தவும், தமிழக விவசாயிகளின் நலன்களைக் காப்பாற்றவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in