Published : 21 Aug 2023 08:25 AM
Last Updated : 21 Aug 2023 08:25 AM

மதுரை அதிமுக மாநாட்டுக்காக 45 நாட்கள் உழைத்த ‘மும்மூர்த்திகள்’

மதுரை அதிமுக மாநில மாநாட்டில் அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு நினைவுப் பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நாஜன் செல்லப்பா எம்.எல்.ஏ படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: எதிர்க்கட்சியாக இருக்கும் நிலை யில் லட்சக் கணக்கானோரை திரட்டி, மதுரை அதிமுக மாநில மாநாட்டை அக்கட்சி நிர்வாகிகள் வெற்றிகரமாக நடத்தி இருக்கின்றனர்.

பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றபோது, மதுரை அதிமுக மாநாட்டை அறிவித்தவுடன், அதற்கான பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மாநாட்டுக்கான இடம் தேடுவதில் இருந்து வாகன நிறுத்தம் வரை சுற்றுச்சாலையில் வலையங்குளம்தான் சரியான இடம் எனத் தேர்வு செய்தது வரை, அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

தனியாருக்கு சொந்தமான அந்த இடத்தின் உரிமையாளர்களிடம் பேசி சட்டப்படி மாநாடு நடத்த அனுமதி பெற்றனர். தொண்டர்கள், பல லட்சம் பேர் பங்கேற்பர் என்பதால் உணவு தயாரிப்புக் கூடம், கழிப்பறை, வாகன நிறுத்தும் இடம் அமைக்க வேண்டியது அவசியமானது. அதனால், வலையங்குளத்தில் மாநாடு நடத்த முடிவு செய்த இடத்தின் அருகருகே இருக்கும் இடங்களின் உரிமையாளர்களையும் அழைத்து பேசி மாநாட்டு பந்தல் மட்டும் 65 ஏக்கரில் அமைத்தனர். உணவு தயாரிக்கும் கூடம், வாகனங்கள் நிறுத்தும் இடங்களையும் சேர்த்தால், மொத்தம் 500 ஏக்கரில் மாநாடு நடத்தப் பட்டுள்ளது.

இது குறித்து செல்லூர் கே.ராஜூ,ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் கூறியதாவது: மாநாட்டு பந்தல், மேடை, ஒலிப்பெருக்கி, நிகழ்ச்சி நிரல், உணவு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் தனித்தனி குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அக் குழுவினருக்கு நாங்களே வழி காட்டிகளாக இருந்தோம். மாநாட்டுக்கு தடை கோரிய பிரச்சினை தொடர்பாக, சட்ட ரீதியான அணுகு முறைகளில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றோம்.

3 மாவட்ட கட்சி நிர்வாகி களுக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக, பல்வேறு மாநாட்டு பொறுப்புகளை அளித்து வளாகத்திலேயே அவர் களை இரவு, பகலாக இருந்து செயல்பட வைத்தோம். அதனால், பொதுச் செயலாளர் முதல் அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடம் கிடைத்த பாராட்டையே எங்கள் பணிகளுக்கான கவுரவமாக கருதுகிறோம். இதற்கான பெருமை மதுரை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களையே சேரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x