

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் மற்றும் ஓய்வூதியம், உதவித்தொகை பெறும் குடும்பத்தில் உள்ள பெண்கள் விண்ணப்பிப்பதற்கான 3 நாள் சிறப்பு முகாம் நேற்றுடன் நிறைவு அடைந்தது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த ஆண்டில் ஒரு கோடி மகளிருக்கு உரிமைத் தொகை அளிக்க ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு நடைபெற்றது.
1.54 கோடி விண்ணப்பங்கள்: கடந்த ஜூலை 24 முதல் ஆக.4-ம் தேதி வரையும், ஆக.5 முதல் ஆக.12-ம் தேதி வரையும் விண்ணப்ப பதிவு நடைபெற்றது. இதில், 1.54 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வருவாய் துறையின்கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவோரின் குடும்பத்தில் தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே நடந்த முகாம்களில் பதிவு செய்யாதவர்களுக்கு ஆக.18, 19, 20 ஆகிய மூன்றுநாட்கள் சிறப்பு முகாம்கள்நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி சிறப்பு முகாம்கள் தொடங்கின. சென்னை மாநகராட்சியில் உள்ள 1,428 நியாயவிலை கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. முதல் நாளிலேயே அதிக அளவில் பெண்கள் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பதிவு செய்தனர்.
இந்நிலையில், 3 நாட்கள் நடைபெற்ற முகாம் நேற்று நிறைவடைந்தது. சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பான விவரங்கள் இன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது.
பயனாளி வீடுகளில் களஆய்வு: விண்ணப்ப பதிவு முடிந்துள்ள நிலையில், வருவாய் துறையினர், இதற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அடுத்ததாக விவரங்கள் தேவைப்படும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.