

சென்னை: நீட் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதையடுத்து, திமுக இளைஞர், மாணவர் மற்றும் மருத்துவர் அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்ற போராட்டத்தை, திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் தொடங்கி வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முடித்து வைத்தார்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல்லில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, பெரம்பலூரில் ஆ.ராசா எம்.பி., ஈரோட்டில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., அமைச்சர் பி.முத்துசாமி, தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மயிலாடுதுறையில் திருச்சி சிவா எம்.பி., கன்னியாகுமரியில் அமைச்சர் மனோ தங்கராஜ், திருவள்ளூரில் திண்டுக்கல் ஐ.லியோனி, காஞ்சிபுரத்தில் மாவட்டச் செயலாளர் சுந்தர், கடலூரில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு, திருப்பூரில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், திருவாரூரில் டிஆர்பி.ராஜா, தஞ்சாவூரில் அன்பில் மகேஸ், புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி, சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன், திருநெல்வேலியில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் போராட்டம் நடந்தது.
இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.