

சென்னை: தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை, மாநில மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
இவ்வாறு மருத்துவர் பணியிடங்களை நிரப்பும்போது, கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 14 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை அறிவிக்க இடைக்காலத் தடை விதித்தது.
இந்த சூழலில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் கவனமாகப் பரிசீலித்து, கரோனா பேரிடர் காலத்தில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு, அந்தப் பணியிடங்களில் சேர ஊக்க மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 6-ல் இருந்து 12 மாதங்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண்ணும், 12-ல் இருந்து 18 மாதங்கள் வரை பணியாற்றியோருக்கு 3 மதிப்பெண்ணும், 18-ல் இருந்து 24 மாதங்கள் பணியாற்றியவர்களுக்கு 4 மதிப்பெண்ணும், 24 மாதங்களுக்கு மேல் சேவையாற்றியோருக்கு 5 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப்பட உள்ளன.
எனினும், 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
தகுதியானவர்கள், தங்களது சேவையை உறுதி செய்யும் வகையில் கரோனா பணிச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெற்று, அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் அதற்கு அடுத்த இரு வாரங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
மருத்துவர் பணியிடங்கள் மட்டுமல்லாது, அனைத்து சுகாதாரப் பணியிடங்கள் நியமனத்திலும், கரோனா ஊக்க மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.