திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்; கல்வி நிலையங்களில் தமிழ் கட்டாய பயிற்சி மொழி: அதிமுக மாநில மாநாட்டில் தீர்மானம்

மதுரை அருகே வலையங்குளத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக மாநில மாநாட்டில் திரண்டிருந்த தொண்டர்கள்.
மதுரை அருகே வலையங்குளத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக மாநில மாநாட்டில் திரண்டிருந்த தொண்டர்கள்.
Updated on
1 min read

மதுரை: மதுரை அதிமுக மாநாட்டில் மொத்தம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை இலக்கிய அணிச் செயலாளர் வைகை செல்வன், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் வாசித்தனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உலகப் பொதுமறை நூலாகத் திகழும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழியை கட்டாயப் பயிற்சி மொழியாக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழக மக்கள் தலையில் அடுக்கடுக்கான வரிகளைச் சுமத்தியதோடு தற்போது மின்கட்டண உயர்வையும் மக்கள் மீது திணித்து வரும் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்.

ஏழை ஏளிய மக்கள் பயன்படுத்தும் பால், மளிகை போன்ற அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். நிபந்தனைகள் ஏதுமின்றி குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்.

கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவுக்குச் சென்றதோடு காவிரி பிரச்சினையைப் பற்றி வாய்திறக்காமல் வந்து தமிழக விவசாயிகளுக்குத் துரோகம் விளைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்டெடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை மீண்டும் நடத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

காவிரி -குண்டாறு இணைப்பு திட்டத்தைக் கிடப்பில் போட்ட திமுக அரசைக் கண்டிக்கிறோம்.கோதாவரி-காவிரி நதி இணைப்பு திட்டத்தைத் நிறைவேற்ற வலியுறுத்துவதோடு, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்காத அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்.

பட்டியலின மக்கள், அவர்கள் கல்வி சார்ந்த வளர்ச்சிக்கு மத்திய அரசால் சிறப்பு நிதியைப் பட்டியலின மக்கள் நலன் சாராத திட்டங்களுக்கு நிதியை மடைமாற்றம் செய்யும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

மீனவ மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை மீறி மீன் வளம் மற்றும் மீனவர் நலன் பாதிக்கும் வகையில் கடலில் பேனா சின்னம் அமைக்கத் துடிக்கும் விளம்பர திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்.

1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் கொடூரத் தாக்குதல் நடத்திவிட்டு தற்போது பொய்யான தகவல்களை வெளியிடும் முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம் என்பன உள்ளிட்ட32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in