

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்தநாள் விழாவை காங்கிரஸார் கேக் வெட்டி கொண்டாடினர்.
தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு காங்கிரஸ் மாநில செயல் தலைவர் கே.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சமூக நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில் மாநில துணைத் தலைவர்கள் உ.பலராமன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, எம்எல்ஏக்கள் துரை சந்திரேசேகர், அசன் மவுலானா, வழக்கறிஞர் அணித் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பின்னர், ஜெயக்குமார் எம்பி மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் 79 கிலோ கேக்கை வெட்டி, ராஜீவ் காந்தி பிறந்தநாளை கொண்டாடினர்.