

சென்னை: ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறத்தில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் பெரம்பூர்ஐசிஎஃப் தொழிற்சாலை முதல் பாடிரயில் நிலையம் வரை நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 31 வந்தே பாரத் ரயில்களில், 25-க்கும் மேற்பட்ட ரயில்கள் வெவ்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, வந்தே பாரத் ரயில் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 2023-24-ம் நிதியாண்டில் சென்னை ஐசிஎஃப்-ல் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் உள்ளன. இதை ஆரஞ்சு, சாம்பல் நிறத்துக்கு மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, ஆரஞ்சு, சாம்பல் நிறத்தினாலான ரயில் பெட்டிகளை ஐசிஎஃப் தயாரித்துள்ளது.
இந்த ரயில் சோதனை ஓட்டமாகபெரம்பூர் ஐசிஎஃப் முதல் பாடி ரயில் நிலையம் வரை நேற்று முன்தினம் இயக்கப்பட்டது. மொத்தம் 8 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.