Published : 21 Aug 2023 06:06 AM
Last Updated : 21 Aug 2023 06:06 AM

வேளச்சேரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள்; ஆட்சியர், நீர்வளத் துறை ஆய்வு செய்ய வேண்டும் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை

வேளச்சேரி ஏரியில் விடப்படும் கழிவுநீரால் ஏரி மாசுபட்டு இருப்பதாக கடந்த2020-ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் செய்திவெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரித்துவருகிறது.

மேலும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்க துணைத் தலைவர் எஸ்.குமாரதாசன் கடந்த 2021-ம் ஆண்டுதாக்கல் செய்த மனுவில், ``ஏரியில்கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

இவ்விரு வழக்குகளையும் பசுமை தீர்ப்பாயம் ஒன்றாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சென்னை மாவட்டஆட்சியர், நீர்வள ஆதாரத் துறை அதிகாரி உள்ளிட்டோரை கொண்ட கூட்டுக் குழுவை அமைத்த அமர்வு, நேரில் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆய்வு செய்து கூட்டுக்குழு தாக்கல் செய்த அறிக்கை:

வேளச்சேரி ஏரியின் உண்மையான பரப்பளவு 107.48 ஹெக்டேர். அரசுத்துறைகளுக்கு ஏரி பகுதிகள் ஒதுக்கப்பட்டதால் 22.4 ஹெக்டேராக குறைந்துவிட்டது. இதனால் ஏரியின் நீர் கொள்திறன்4-ல் ஒரு பங்காக, அதாவது 19.23மில்லியன் கன அடியாகக் குறைந்துவிட்டது. பல்வேறு வடிகால்களிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் ஏரியில்விடப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் கடந்த வாரம், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேளச்சேரி ஏரியில் அங்கீகரிக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டியதா, இல்லையா என்பதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீர்நிலையில் எப்படி கட்டிடத்தைக் கட்ட அதிகாரம் கிடைத்தது என்பது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியரும், நீர்வள ஆதாரதுறையும் இணைந்து, தற்போது ஏரியாகஉள்ள பகுதி, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் குறித்த ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை குடிநீர் வாரியம், அப்பகுதியில் விதிகளை மீறி கழிவுநீர் விடுவோர் மீதுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அங்குஎத்தனை அங்கீகரிக்கப்படாத, கழிவுநீர் இணைப்பு பெற முடியாத வீடுகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணைசெப்.4-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x