தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா?

தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா?

Published on

விழுப்புரம்: தமிழகத்தில் 12 ஆண்டுகளாக 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப் பாளர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 2012-ம்ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட் டனர். 2014-ம் ஆண்டு ரூ. 2 ஆயிரம் ஊதியம் உயர்த்தப்பட்டது. 2017-ம் ஆண்டு ரூ. 700 உயர்த்தப்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ரூ .2,300 ஊதியம் உயர்த்தப்பட்டதால் தற்போது ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியம் பெறுகின்றனர். இன்னமும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டங்களும் நடத்தினர். இது குறித்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:

'உங்கள் தொகுதி ஸ்டாலின்’ கலந்துரையாடலின் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியிலும் இதைஅறிவித்தார். ஆனால் இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை.

ஆனால், "கோரிக்கை வைத்தால் அதை நிறைவேற்றுவேன் என பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள் ளார்கள்" என்று முதல்வரே கூறி வருகிறார். ஆனால் எங்கள் கோரிக் கையை இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் இதற்கு முன்னர் பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், இசை, ஓவியம் போன்ற சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர்.

பகுதி நேர பணியாளர்கள் பல்வேறு துறைகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளார்கள். இதேபோல் எங் களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ராஜஸ்தானில் 1 லட்சம் ஒப்பந்த ஊழியர்களும், ஒடிசாவில் 57 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களும், பஞ்சாபில் ஒப்பந்த பணி செய்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யாத நிலையில், உயிரிழந்த பகுதி நேர ஆசிரியர் குடும்பங்களுக்கு அரசு பணப் பலன்கள் எதுவும் வழங்குவதில்லை. கடந்த 12 ஆண்டுகளில் 4 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது 12 ஆயிரம் பேர் இந்த வேலையை நம்பி வாழ்கிறோம்.

எங்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்குவது இல்லை. போனஸ் கொடுப்பது இல்லை. 28 மாதங்களாக ஊதிய உயர்வும் கொடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பணி நிரந்தர அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in