

திருநெல்வேலி: 2024-ல் வரும் நாடாளுமன்ற தேர்தலை பார்த்து திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைப் பயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்ற வேள்விதான் இந்த நடைப் பயணம். உங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் எதிர்காலத்துக்காக பிரதமர் மோடிக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
திமுகவுக்கு பயம்: தண்ணீர் இல்லாத பகுதியாக தமிழகம் மாறி வருகிறது. திமுகவினர் ஆற்றுமணலை கொள்ளையடித்து, மலைகளை வெட்டி எடுத்தது கேரளத்துக்கு கொண்டு செல்கிறார்கள். திமுகவினர் அவர்களது குடும்பங்களுக்காக ஆட்சி நடத்துகிறார்கள். அவர்கள் கப்பம் கேட்பதால் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய தொழிற்சாலைகள் வரவில்லை. இதனால் இளைஞர்கள், படித்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக யாரும் கேள்வி கேட்காதபடி கொள்ளை நடைபெற்றது. இப்போது 2 அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளால் மோடி மீது திமுகவுக்கு பயம் வந்துள்ளது. வரும் 2024 தேர்தலை குறித்து திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வந்தால் அது அவர்களுக்கு கடைசி அபாய மணியாக இருக்கும். இதனால் தான் ஊழல் செய்தவர்கள் எல்லாம் ஒன்றாக கூடி ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள்.
கனிம வளக் கடத்தலுக்கு ஆதரவு: இத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருப்பவர் அப்பாவி வேஷம் போடும் அப்பாவு. 1999-ம் ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தின்போது காவல்துறையினரின் தடியடியால் தாமிரபரணியில் 17 பேர் மூழ்கி இறந்தனர். அப்போது அச் சம்பவத்துக்கு கருணாநிதிதான் பொறுப்பு என்று அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அப்பாவு சுமத்தியிருந்தார். இப்போது அவர் திமுக எம்.எல்.ஏ..
ராதாபுரம் தொகுதியில் சட்டவிரோத குவாரிகள் செயல்படுவது, கனிமவளங்களை கடத்துவது போன்றவற்றுக்கு அப்பாவு ஆதரவு அளித்து வருகிறார். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாதவாறு திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் குவாரி விபத்து நிகழ்ந்து வருகிறது. அப்பாவு கொஞ்சம் மனசாட்சியுடன் இருக்க வேண்டும். இயற்கை வளங்களை அழித்து பணக்கார ராகி என்ன செய்யப்போகிறோம் என்பதை திமுகவினர் உணர வேண்டும்.
இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இதுவரை ஒரு செங்கல்லைக்கூட கொண்டுவரவில்லை என்று தெரிவித்தார்.