“தமிழக அரசிடம் அதிகாரம் இல்லை... கனிம வளங்கள் கடத்தலை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்” - மனோ தங்கராஜ்
நாகர்கோவில்: கனிம வளங்கள் கடத்தலை தடுக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதே திமுகவின் நிலைப்பாடு. ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற தனியார் அகாடமிகளுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. கல்வியை மத்திய பட்டியலில் சேர்த்து விடக்கூடாது. மாநில பட்டியலில் அது இருக்க வேண்டும்.
அருகதை இல்லை: நாகரீகமான பேச்சு பாஜகவில் உள்ளதா? என அண்ணாமலையிடம் மட்டுமல்ல, பாரத பிரதமரிடம் கூட கேட்டு பாருங்கள். அவரிடம் மணிப்பூர் கலவரம் மற்றும் இந்திய நாட்டின் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினால் மழுப்பலாக உகாண்டா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளை சுட்டிக் காட்டுகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை ஏளனமாக பேசும் அண்ணாமலையால், திமுக தொண்டர்களுக்கு பதில் சொல்ல முடியாது. சொகுசு பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலைக்கு முதல்வரை விமர்சிக்கவோ, அவரை பற்றி பேசுவதற்கோ அருகதை இல்லை. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு கனிம வளங்களை கொண்டு செல்வது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கனிம வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. இதை தடுக்க மத்திய அரசு தான் முன்வர வேண்டும். ஆனால் அவர்கள் இதை செய்ய மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
