Published : 07 Dec 2017 11:24 AM
Last Updated : 07 Dec 2017 11:24 AM

தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தடை நீக்கம்: பிரதான வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 800 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு 2016-ல் முடிவு செய்தது. பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்து, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களையும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிராக பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக நிரந்தர பதவி உயர்வு பெற்று மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வருவோரை, அவர்களின் முந்தைய பட்டதாரி ஆசிரியர் பணிமூப்பின் அடிப்படையில் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்க முடியாது.

இதனால் பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்க’ கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 2016-ல் தடை விதித்தது. தடையை நீக்கக்கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆதிகேசவலு பிறப்பித்த உத்தரவு:

தலைமை ஆசிரியர் பணியிடங்களில் 630 இடங்களை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டும், 250 இடங்களை முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டும் நிரப்பப்படும் என அரசு தெரிவித்துள்ளது. குறைந்த இடங்களில் மட்டுமே முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். பெரும்பாலான தலைமை ஆசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். இதனால், ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது.

இருப்பினும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்வது இந்த வழக்கில் அடுத்து பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கு கட்டுப்படும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சமவாய்ப்பு கோர முடியாது. இந்த நிபந்தனைகளை பணி நியமன உத்தரவில் குறிப்பிட வேண்டும். இவ் வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x