

நவீன விளையாட்டுகளால் நலி வடைந்து வரும் சிலம்பம், உறி யடி, கிளியாந்தட்டு, பல்லாங்குழி, நொண்டி, பம்பரம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு கள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் தெரிவித்தார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் பேசியதாவது:
பல நூற்றாண்டுகளாக தமிழக மக்களால் விளையாடப்பட்டு வரும் பாரம்பரியமிக்க விளையாட்டுகளான சிலம்பம், உறியடி, தாயக்கட்டை, ஆடுபுலி ஆட்டம், கிளியாந்தட்டு, பல்லாங் குழி, கில்லி, நொண்டி, பம்பரம், கண்ணாமூச்சி போன்ற விளை யாட்டுகள் நவீன விளையாட்டு களால் நலிவடைந்து வருகின்றன. இவற்றை மேம்படுத்தும் நோக்கில் ஒரு நல்ல தொடக்கமாக, தேர்ந் தெடுக்கப்பட்ட 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டுகளுக்கான விழா நடத்தப்படும். இந்த விளை யாட்டுகளை பாதுகாத்து மேம்படுத் தவும் ஆவணப்படுத்தவும் ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் உத்தர விட்டுள்ளார்.
தமிழகத்தில் நீர் விளையாட்டான பாய்மர படகு ஓட்டுதல் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒலிம்பிக் விளையாட்டுகளில் பாய்மர படகுப் போட்டி 10 நிகழ்வுகளாக உள்ளன. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த பாய்மர படகோட்டும் வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வசதியாக ரூ.40 லட்சத்தில் 2 ரப்பர் படகு பலகைகள் வாங்கப்படும்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ரூ.67 லட்சத்தில் தடகள விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படும். சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் ரூ.43 லட்சத்தில் முகாம் மையம் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சுந்தரராஜ் கூறினார்.