Published : 27 Dec 2017 10:17 AM
Last Updated : 27 Dec 2017 10:17 AM

உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை பேனர்களில் அனுமதிப்பதால் மற்றவர்களுக்குத்தான் பிரச்சினை: உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கருத்து

உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை பேனர்களில் அனுமதிப்பதன் மூலம், அந்த பேனர்களில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மற்றவர்களுக்குத்தான் பிரச்சினை என்று உயர் நீதிமன்ற நீதிபதிஎஸ்.வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை பேனர்கள், போஸ்டர்கள், கட்-அவுட்களில் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கடந்த அக்டோபர் 23-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை அதிகாரிகள் முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே.பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தி.நகர் எம்எல்ஏ சத்யா ஆகியோருக்கு எதிராக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் எந்த விதத்திலும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கவில்லை. அவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவே எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் மீதான அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம் நீதிமன்றத்துக்கு தேவை யான ஆவணங்களை தாக்கல் செய்ய, இந்த வழக்கில் அவர்களும் எதிர் மனுதாரர்களாக தொடர்வர் என உத்தரவிட்டார்.

அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.திவாகர் ஆஜராகி, ‘‘உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை பேனர்கள், போஸ்டர்களில் பயன்படுத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை, தலைமை நீதிபதி அடங் கிய அமர்வு ரத்து செய்துள்ளது’’ என சுட்டிக்காட்டினார்.

அதையடுத்து அந்த உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை பேனர்களில் அனுமதிப்பதன் மூலம், அந்த பேனர்களில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதன்மூலம் மற்றவர்களுக்குத்தான் பிரச்சினை என கோவை சம்பவத்தை நினைவூட்டி கருத்து தெரிவித்தார். முதல் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவை ஆய்வு செய்த பிறகு இந்த அவமதிப்பு வழக்கை தொடர்ந்து விசாரிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறி விசாரணையை வரும் ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x