பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க மத்திய அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க மத்திய அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
Updated on
1 min read

பட்டாசு தொழிலையும், அதனை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரையும் பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் சுமார் 850 ஆலைகளில்தான் நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 95 சதவிகிதம் உற்பத்தியாகிறது.

இந்த தொழில் நேரடியாகவும், சார்புத் தொழில் மற்றும் விற்பனை சார்ந்தும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகும்.

சமீபத்திய மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றால் தொழிற்சாலைகள் இரண்டு முறை கதவடைப்பு செய்யப்பட்டதன் காரணமாக தொழிலாளர்கள் சம்பளமின்றி கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர்.

தற்போது சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபடுதலை முன்னிறுத்தி உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை காரணமாக்கி 2017 டிசம்பர் 26 முதல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

பெருநகரங்களில் காற்று மாசுபடுதலுக்கு பிரதான காரணம் விதிகளை மீறி வெளியேற்றப்படும் தொழிற்சாலைகளின் நச்சு புகை, கூடுதலான வாகனப் பயன்பாடு, காலாவதியான வாகனங்கள் மூலம் வெளியேற்றப்படும் நச்சுப்புகை மற்றும் குளிர்சாதன வசதிக்கான மின்சாதனங்களிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளே பிரதான காரணம் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வருடத்திற்கு ஒன்று அல்லது இருமுறை விழாக்காலங்களின் போது பயன்படுத்தப்படும் பட்டாசுக்கு மட்டும் தடை விதிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுத்திட முடியும் என்பது ஏற்கத்தக்கதல்ல.

பட்டாசு மூலம் ஏற்படும் சப்தம் மற்றும் புகை உள்ளிட்டவைகளை ஒழுங்குபடுத்தி காண்காணிப்பதின் மூலம் மாசுபடுதலை கட்டுப்படுத்திட இயலும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையீடு செய்து பட்டாசு தொழிலையும், அதனை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரையும் பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை உடனடியாக திறப்பதற்கு உத்தரவிட வேண்டுமெனவும், கதவடைப்பினால் ஏற்பட்ட வேலையிழப்பு - வருமானமிழப்பு காலத்திற்கு சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது"

இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in