Published : 06 Dec 2017 09:59 AM
Last Updated : 06 Dec 2017 09:59 AM

வேட்புமனுவை நிராகரித்தால் என்ன? சுயேச்சை வேட்பாளரை வெற்றி பெறச் செய்வேன்: விஷால்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரித்தாலும்கூட சுயேச்சை வேட்பாளர் யாராவது ஒருவரை ஆதரித்து அவரைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வேன் என நடிகர் விஷால் ஆவேசமாக சூளுரைத்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இத்தனை சிக்கல்கள் இருக்குமா?

என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. முதலில் எனது மனு ஏற்றுகொள்ளப்பட்டது. ஆனால், தற்போது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இதுதான் கதியா? என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. எப்படியிருந்தாலும் சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவரை ஆதரித்து, அவரை நான் கண்டிப்பாக வெற்றி பெறச் செய்வேன். படத்தில் நடக்கும் காட்சிகளை போல் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் ஏற்பட்டன. இத்தனை சிக்கல்கள் இருக்கும் என நினைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

"ஜனநாயகம் தரம் தாழ்ந்துவிட்டது!! நான் தாக்கல் செய்த வேட்புமனு முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது பின்னர் நான் ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்திலிருந்து கிளம்பிய பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளது. மனு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இதயமற்ற செயல். 2016 டிசம்பர் 5-ம் தேது அம்மா மறைந்தார். 2017 டிசம்பர் 5-ம் தேதி ஜனநாயகம் மரித்தது. எல்லாம் அரசியல் விளையாட்டு" எனப் பதிவிட்டுள்ளார். #PoliticalGame #Amma died #Democracy died என்ற ஹேஷ்டேக்குகள் கீழ் இதைப் பதிவிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் முதல் நிராகரிப்பு வரை..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் அறிவித்தது பெரும் திருப்பமாகப் பார்க்கப்பட்டது. தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் விஷால் கடந்த திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி, தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. இதையொட்டி நடிகர் விஷால் தேர்தல் அலுவலகத்துக்கு பகல் 12.50 மணிக்கு வந்தார். அவரது மனுவில் பல்வேறு குறைகள் இருப்பதால் அதனை ஏற்கக்கூடாது என்று அதிமுக, திமுக தரப்பில் கூறப்பட்டது. அதன்காரணமாக விஷால் மனு நிராகரிக்கப்படும் என்று தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது மனுவை நிராகரிக்கக் கூடாது என்று விஷால் தரப்பு வாதிட்டது.

 

 

இதையடுத்து, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மீண் டும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு விஷால் மனு பரிசீலிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் நடிகர் விஷால் தேர்தல் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. விஷாலை வேட்பாளராக முன்மொழியாத 2 நபர்களின் விவரங்கள் இடம்பெற்றிருந்ததால்தான் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் விளக்கம் அளித்தார். இதையடுத்து மாலை 5.30 மணிக்கு தேர்தல் அலுவலகத்துக்கு வந்த நடிகர் விஷால், தனக்கு முன்மொழிந்தவர்களில் இருவர் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து விஷாலின் மனு இரண்டாவது முறையாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீண்ட ஆய்வுக்குப் பிறகு உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியிடுவது உறுதியானது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x