

மதுரை: மதுரை வலையங்குளம் அதிமுக மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 1,200 பேருடன் சிறப்பு ரயிலில் வந்தனர்.
மதுரை அருகே வலையங் குளத்தில் அதிமுக மாநில மாநாடு இன்று ( ஞாயிற்றுக் கிழமை ) கோலாகலமாக நடக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அதிமுக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் அக்கட்சி பொதுச் செயலாளர் கே.பழனிசாமி மற்றும் பிற தலைவர்களை ஒரே இடத்தில் நேரில் பார்க்க அக்கட்சி தொண்டர்கள் ஆர்வமடைந்தனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற் காக சிறப்பு பஸ்கள், வேன்கள், கார்கள் மற்றும் பல்வேறு வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் மதுரையில் கடந்த 2 நாட்களாக திரண்டு வருகின்றனர். மேலும், நிர்வாகிகள் பலர் விமானம், ரயில்களில் மதுரையில் சாரை, சாரையாக திரண்டு வருவதால் பஸ்நிலையம், ரயில்நிலையம், விமான நிலையத்திலும் அதிமுக கரைவேட்டி நிர்வாகிகள், தொண் டர்கள் கூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு நேற்று காலை 9:15 மணிக்கு மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலில் மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிமுக தொண் டர்கள் 1,200 மதுரை வந்தனர். அவர்களை மதுரை அதிமுக நிர்வாகிகள் வரவேற்று, மாநாடு நடக்கும் பகுதிகளில் தங்க வைக்க அழைத்து சென்றனர்.
ரயிலில் இருந்து இறங்கிய தொண்டர்கள் இரட்டை இலையை காட்டியபடியும், எம்ஜிஆர், ஜெயலலிதா, கே.பழனிசாமி ஆகியோரை வாழ்த்தி கோஷமிட்ட படியும் சென்றனர்.