

சென்னை: விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்திருப்பவர்கள், விரைவாக மின் இணைப்பு பெறும் வகையில் தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சாதாரணம், சுயநிதி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரணப் பிரிவில் மின்சாரம், மின் வழித்தட செலவு இலவசம். சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசம், மின் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். இந்நிலையில், சுயநிதி பிரிவின் கீழ் தத்கல் என்னும் விரைவு திட்டத்தில் மின் இணைப்புப் பெற விரும்புவோர் வாரிய செயற்பொறியாளரை அணுகலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தத்கல் முறையில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தத்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். எனவே, ஏற்கெனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள், தத்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதியின் மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு செயற்பொறியாளரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், மின் வழித்தட செலவுக்காக ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை ஒரு முறை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.