மோசடி பத்திரப்பதிவு ரத்து சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மோசடி பத்திரப்பதிவு ரத்து சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சார் - பதிவாளர் அலுவலகங்களில் மோசடியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் மேற்கொள்ளப்பட்ட பத்திரப் பதிவுகளை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக பத்திரப்பதிவு சட்டத்தில், கடந்த 2022-ம் ஆண்டு சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கடந்த 2022ஆகஸ்ட் முதல் இந்த சட்டதிருத்தம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்தை பயன்படுத்தி கடந்த 2004-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வது தொடர்பாக தென் சென்னை மாவட்டப் பதிவாளர் பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து டி.எஸ்.டி.காஸ்நவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பல ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை தற்போதுள்ள சட்ட திருத்தத்தைப் பயன்படுத்தி மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்த அனுமதித்தால் அது நில உரிமையாளர்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என வாதிடப்பட்டது.

சட்டத்தில் தெளிவற்ற நிலை: அதையடுத்து நீதிபதி, தமிழகஅரசின் இந்த சட்ட திருத்தத்தில் மாவட்ட பதிவாளருக்கான அதிகாரத்தை முன்தேதியிட்டு அமல் படுத்துவது தொடர்பாக தெளிவற்ற நிலை உள்ளது. அவ்வாறு முன் தேதியிட்டு அமல்படுத்த அனுமதித்தால் லட்சக் கணக்கான பத்திரப் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த புதிதாக கோரிக்கைகள் வரும். எனவே இந்த சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது.

பிரச்சினைகள் இருந்தால்...: சட்ட திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பாக பதியப்பட்ட பத்திரப் பதிவுகளில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றங்கள் மூலமாகவே நிவாரணம் கோர முடியும். எனவே மனுதாரர்கடந்த 2004-ம் ஆண்டு மேற்கொண்ட பத்திரப் பதிவு குறித்து விசாரணை நடத்த மாவட்டப் பதிவாளர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது, என உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in