

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குல்பி ஐஸ் சாப்பிட்ட 52 சிறார்கள் உட்பட 94 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, குடிசை தொழிலாக குல்பிஐஸ் தயாரித்து வரும் நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ளது முட்டத்தூர் கிராமம். இங்கு, நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் மொபெட்டில் ஒருவர் குல்பி ஐஸ் விற்றுச் சென்றார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரிடம் குல்பி ஐஸ் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர்.
இரவு 8 மணியளவில், 3 வயது சிறுவர்கள் முதல் 24 வயதுடைய இளையோர் வரை அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவர்களில் சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டதால் அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். நேரம் செல்லச்செல்ல எண்ணிக்கை கூடி 52 சிறார்கள் உள்பட 94 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த ஆட்சியர் பழனி, எம்எல்ஏ புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆட்சியர் விளக்கம்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பழனி, “இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 94 பேருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு கட்டுக்குள் வந்துள்ளது. காணை அருகே உள்ள ஏழுசெம்பொன் கிராமத்தில் குடிசை தொழிலாக குல்பி ஐஸ் தயாரித்த கண்ணன் என்பவரிடம் இதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து, மாதிரிகளை சேகரித்துள்ளனர். உரிய உரிமம் இல்லாமல் இதுபோன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கும் கூடங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
மருத்துவமனையில் உள்ளவர்களை விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் சந்தித்து, நலம் விசாரித்தார். இதற்கிடையே, குல்பி ஐஸ் விற்ற கண்ணன் என்பவரை கஞ்சனூர் போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.