Published : 20 Aug 2023 07:51 AM
Last Updated : 20 Aug 2023 07:51 AM

மதுரையில் இன்று அதிமுக மாநில மாநாடு - தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்

மதுரை: மதுரையில் இன்று நடைபெறவுள்ள அதிமுக மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதுமிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்.

அதிமுக மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை கட்சியினர் செய்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின்பு, தென் மாவட்டங்களில் அதிமுகவை பலப்படுத்துவதற்காகவும், தனக்குள்ள செல்வாக்கை நிலைநாட்டவும் பழனிசாமி மதுரையில் இந்த மாநாட்டை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

கட்சி தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதை நினைவுகூரும் வகையில் இந்த மாநாட்டுக்கு ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என பெயரிடப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் அழைக்கப்படாத நிலையில், முழுக்க முழுக்க அதிமுகவினர் மட்டுமே பங்கேற்கும் வகையில் மாநாட்டை நடத்துகின்றனர்.

மாநாட்டில் பங்கேற்க பேருந்துகள், தனியார் வாகனங்கள் மூலம் நிர்வாகிகள், தொண்டர்கள் மதுரையில் நேற்றே குவியத் தொடங்கினர்.

மாநாட்டுத் திடலில் பந்தல், உணவுக் கூடங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.காலை முதல் இரவு வரை தொண்டர்களுக்கு உணவு வழங்க 300 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

பழனிசாமிக்கு வரவேற்பு: முன்னாள் முதல்வர் பழனிசாமி சேலத்திலிருந்து கார் மூலம் நேற்று மாலை 5 மணிக்கு மதுரை வந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையிலான அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக பழனிசாமி தலைமையில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இன்று காலை 7.45 மணியளவில் மாநாட்டுத் திடலின் முகப்பில் உள்ள 51 அடி உயர கம்பத்தில் பழனிசாமி கட்சிக் கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். பின்னர் ஜெயலலிதா பேரவை உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த 3,000 தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து மாநாட்டுப் பந்தலையும், அதிமுக அரசின் சாதனைகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் தொடங்கி வைக்கிறார்.

மாநாட்டின் பிரதான நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு தொடங்குகின்றன. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்பு, பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார்.

நீட் தேர்வு, காவிரி நீர் பிரச்சினை, கச்சத்தீவு, முல்லை பெரியாறு அணை, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாகவும், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்துவது, அதிமுகவின் எதிர்கால திட்டம் போன்றவை குறித்தும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x