Published : 20 Aug 2023 04:04 AM
Last Updated : 20 Aug 2023 04:04 AM

நிலக்கரி இறக்குமதியில் ரூ.564 கோடி முறைகேடு: வெளிநாடு வாழ் இந்தியரின் ஜாமீனுக்கு தடை

சென்னை: நிலக்கரி இறக்குமதியில் ரூ.564 கோடி முறைகேடு செய்ததாக வெளிநாடு வாழ் இந்தியரான தனியார் நிறுவன இயக்குநருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சிபிஐ நீதிமன்ற வழக்கு ஆவணங்களையும் உயர் நீதிமன்றம் கைப்பற்றியுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து கடந்த 2011-12 மற்றும் 2014 - 15 ஆகிய ஆண்டுகளில் தரம் குறைந்த நிலக்கரியை, உயர் தரமிக்க நிலக்கரி என இறக்குமதி செய்து அரசை ஏமாற்றியதாக, கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான வெளிநாடு வாழ் இந்தியர் அகமது ஏ.ஆர்.புகாரி, தேசிய அனல் மின் கழகம்,உலோகங்கள் மற்றும் தாதுக்கள் விற்பனை நிறுவனம், ஆரவளி தனியார் மின் நிறுவனம் ஆகியவற்றின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இதேபோல, தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில் ரூ.564.48 கோடி, அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பணப்பரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்திருந்தனர். அத்துடன் அகமது புகாரியின் கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.557 கோடியையும் அமலாக்கத்துறை முடக்கியது.

நிபந்தனை ஜாமீன்: இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அகமது புகாரியின் ஜாமீன் மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், கடந்த ஆக.16-ம் தேதி சென்னை 13-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புகாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி அமலாக்கத்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்,ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக ஆஜராகி முறையீடு செய்தார். அப்போது, ‘‘வெளிநாடு வாழ் இந்தியரான அகமது ஏ.ஆர். புகாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தும், அதை கீழமை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை’’ என வழக்கறிஞர் என்.ரமேஷ் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து கைப்பற்ற உயர் நீதிமன்ற ஊழல் கண்காணிப்பு பதிவாளருக்கு உத்தரவிட்டார். அதன்பிறகு அந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அவசர கதியில் கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதற்கான காரணங்களையும் உத்தரவாக குறிப்பிட வில்லை. இருதரப்புவாதங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை’’ என கூறி சிறப்பு நீதிமன்றம் அகமது ஏ.ஆர்.புகாரிக்குஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளார்.

மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட வழக்குஆவணங்களை நகல் எடுத்து பத்திரப்படுத்த ஊழல் கண்காணிப்பு பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதன்பிறகு வழக்குஆவணங்களை கீழமை நீதிமன்றத்துக்கு அனுப்ப அறிவுறுத்திஉள்ளார். மேலும், இதுதொடர்பாக ஆக.23-ம் தேதிக்குள் அகமது புகாரி பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x