

சென்னை: கோயிலில் கைப்பிடி மண் எடுப்பதை தடுத்த தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் மண் என் தேசம் இயக்கத்தின் கீழ், சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் போற்றும் வகையிலும், இந்திய ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையிலும் நாட்டின் புனித இடங்களின் மண் மற்றும் புனித நீர் நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட உள்ள அம்ரூத் பூங்காவில் வைக்கப்பட உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கோயில்கள் உள்ளிட்ட 350 இடங்களில் இருந்து கைப்பிடி மண் எடுத்து அனுப்பப்பட்டு வருகிறது. இது தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம். ஆனால், கோயில்களில் கைப்பிடி மண் எடுப்பதை தமிழக அரசு தடுத்துள்ளது. கைப்பிடி மண் எடுப்பதை கனிம வளம் என்று பேசியுள்ளனர்.
இது கண்டிக்கத்தக்கது. சென்னை அயனாவரம் காசி விஸ்வநாதர் கோயில் குளத்தில் முறைகேடாக, பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் கொள்ளையை கையும் களவுமாக இந்து முன்னணி பிடித்துக் கொடுத்தது. ஆனால், இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை புகார் அளிக்க முன்வரவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.