Published : 21 Dec 2017 05:54 PM
Last Updated : 21 Dec 2017 05:54 PM

தாய் குழந்தையை பனிக்குடத்தில் வைத்துக் காப்பது போல என்னைக் காத்தவர் கருணாநிதி: ஆ.ராசா பேட்டி

ஒரு தாய் தன் குழந்தையை பனிக்குடத்தில் வைத்துக் காப்பதுபோல என்னைக் காத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்துத் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தீர்ப்பு குறித்துத் தனியார் தொலைக்காட்சிக்கு ஆ.ராசா அளித்த பேட்டியில், ‘’இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடனே சொன்னேன், இது நிற்காது என்று. ஏனெனில் போதுமான புரிதல், தெளிவு இல்லாமல் அவசர கோலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரசியல் காரணமாகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் எதுவுமே இல்லை என்பது சிபிஐக்கே நன்றாகத் தெரியும். 14 நாட்கள் எந்தவித பயமும் இல்லாமல் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சி சொன்னேன். அதிலேயே தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிட்டது.

எனக்கிருக்கும் ஒரே வருத்தம்...

சட்டத்தின் முன்னால் சாதாரண மனிதனாக எனது கடமையை ஆற்றினேன், அவ்வளவுதான். எனக்கிருக்கும் ஒரே வருத்தம்… 2ஜி வழக்கை முன்னிறுத்தி திமுகவை சில சக்திகள் களங்கப்படுத்த விரும்பியதுதான். ஆனால் அவை இன்று தோல்வி அடைந்திருக்கின்றன என்பதில் மகிழ்ச்சி.

’பனிக்குடத்தைக் காப்பது போல’

தீர்ப்பு வெளியானவுடன் செயல்தலைவர் ஸ்டாலினிடம் பேசினேன். முன்னதாக சிறையில் இருந்து வெளியானவுடனே தலைவர் முன்னிலையிலேயே கூறினேன். ‘ஒரு தாய் தன் குழந்தையை எப்படிப் பனிக்குடத்தில் வைத்துக் காப்பாற்றுவாளோ அதேபோல கருணாநிதியும், திமுகவும் என்னைக் காப்பாற்றினர்’ என்று. அதைத்தான் இப்போதும் கூறுகிறேன்.

2ஜி குற்றச்சாட்டு எழுந்து நான் பதவியை ராஜினாமா செய்த நேரத்தில் கூறியிருந்தேன். நிறுவனங்களுக்கிடையே ஏற்படும் மோதலில் ஒரு தீர்வு வரவேண்டும் என்று நினைத்தேன். அந்தத் தீர்வு அப்போது எனக்குக் கிடைக்கவில்லை. கடைசியாக நீதிபதி ஓ.பி.சைனியிடம் கிடைத்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x