Published : 03 Dec 2017 08:46 AM
Last Updated : 03 Dec 2017 08:46 AM

நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் பெரியார் இயக்க தொண்டர்கள் இணைந்து செயல்படுவது அவசியம்: பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவுறுத்தல்

‘நாடு தற்போதுள்ள சூழ்நிலையில், அனைத்து பெரியார் இயக்க தொண்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 85-வது பிறந்த நாள் விழா, ஜாதி ஒழிப்பு போராட்டத்தின் 60-வது ஆண்டு நிறைவு விழா, ‘விடுதலை’ நாளிதழுக்கு சந்தா வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. முதல் நிகழ்வாக கி.வீரமணி தனது மனைவி மோகனாம்பாள் மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். இதில், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் வி. அன்புராஜ், துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் த.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கி.வீரமணிக்கு பழங்கள், மலர்கொத்து, நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கி.வீரமணியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழகத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கோவை கு.ராமகிருட்டிணன், தற்போது அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது, தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் குமரகுருபரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, ‘எனது பிறந்த நாளன்று பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் பெரியாரின் தொண்டர்களை சந்தித்து பேசுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து பெரியார் இயக்க தொண்டர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல, கு.ராமகிருட்டிணன் போன்ற அனைத்து பெரியார் இயக்க தொண்டர்களும் ஒருங்கிணைந்துவகுப்புவாத கொள்கைகளுக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து ‘திராவிடர் இனம் தலை நிமிர’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்குக்கு பேராசிரியர் ப.காளிமுத்து தலைமை வகித்தார். திராவிடர் கழக பிரசாரச் செயலாளர் அ.அருள்மொழி, தஞ்சை பெரியார் செல்வன், அன்பழகன், சே.மெ.மதிவதனி உள்ளிட்டோர் பேசினர். மாலை 4 மணிக்கு ‘தமிழர் தலைவரின் தொண்டில் விஞ்சி நிற்பது பெரியார் கொள்கைகளை உலகமயமாக்கியதே!, பெரியார் கொள்கைகள் சட்ட வடிவமாக்கியதே!’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

மாலையில் நடந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று பேசினர்.

கழகங்கள் இணைப்பா?

கி.வீரமணி, கு.ராமகிருட்டிணன் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய கோவை பா.சாந்தகுமாரிடம் பேசியபோது, ‘பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில், கொள்கைகளை கொண்டு சேர்ப்பதில், திராவிடர் கழகத்தின் கோவை பிரிவு அப்போது சற்று வேகமாக செயல்பட்டது. பரபரப்பான, அதிரடியான போராட்டங்கள், அப்போது கோவையில் நடத்தப்பட்டன.

இதன் காரணமாக திராவிடர் கழக தலைமைக்கும், கோவை ராமகிருட்டிணனுக்கும் சற்று முரண்பாடு ஏற்பட்டது. அப்போது திருச்சி செல்வேந்திரன் தலைமையில், ஒரு பிரிவினர் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டபோது, கோவை ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் அவரோடு வெளியேறும் முடிவை எடுத்தனர். ஆனால், செல்வேந்திரன் திமுகவில் இணையும் முடிவை எடுத்ததால், கோவை ராமகிருட்டிணன் தனித்து செயல்பட முடிவு எடுத்தார். 1987-ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து, திராவிடர் கழகம் (ஆர்) என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தோம். அதன் பின் 10 ஆண்டுகள் கழித்து, கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகத்துடன் இணைய முடிவு எடுத்தபோது, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உருவானது என்றார்.

இதுகுறித்து கு.ராமகிருட்டிணனிடம் கேட்டபோது, ‘30 ஆண்டுகளுக்குப் பின், இந்த சந்திப்பு நிகழ்கிறது. வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடும் இயக்கங்கள், ஒரு தளத்தில் நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது’ என்றார். தமிழக நலனுக்காக பெரியாரின் தொண்டர்கள் தேவைப்படும்போது ஒன்றிணைவோம்’ என்றார். அப்போது, ‘உங்கள் இயக்கத்தை திராவிடர் கழகத்துடன் இணைக்கவுள்ளீர்களா’ என்று கேட்டபோது, ‘காலத்தின் தேவை ஏற்படுமாயின் எதுவும் சாத்தியம்’ என்று கு.ராமகிருஷ்ணன் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x