Published : 07 Dec 2017 11:04 AM
Last Updated : 07 Dec 2017 11:04 AM

29 சுயேச்சைகள் கேட்டுள்ளதால் குலுக்கல் முறையில் தொப்பி சின்னம் ஒதுக்கீடு: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

சுயேச்சை வேட்பாளர்கள் 29 பேர் தொப்பி சின்னத்தை கேட்டிருப்பதால் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தனது மனுவை நிராகரிக்கக் கூடாது என்பதற்காக அவர் அளித்த தொலைபேசி உரையாடல்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்க இயலாது. இந்த விஷயத்தில் நடிகர் விஷால் காவல்துறையிடம் முறையிட வேண்டும். காவல்துறையின் வாயிலாக தீர்வு பெறலாம்.

ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் கண்டறியப்பட்டு, 1,947 பேரின் பெயர்கள் நீக்கப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இத்தொகுதியில் இறப்பு, இரட்டைப் பதிவு அடிப்படையில் 44,783 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

தொகுதியில் 5,117 வாக்காளர்களின் பெயர் 2 இடங்களில் இருப்பதாக திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கள ஆய்வு நடத்தப்பட்டதில், 2,647 பேரின் பெயர்கள் மட்டும் இரு இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 700 பெயர்கள் ஏற்கெனவே நீக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள 1,947 பேரின் பெயர்கள், தற்போது தேர்தல் நெருங்கிவிட்டதால், நீக்கப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் மட்டுமே இவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 145 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், 72 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 73 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மனுத்தாக்கலின்போது 52 பேர் தொப்பி சின்னத்தை கேட்டிருந்தனர். தற்போது ஏற்கப்பட்ட 72 மனுக்களில், 29 சுயேச்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை கேட்டுள்ளனர். மனுக்களை திரும்பப் பெற டிச.7-ம் தேதி (இன்று) கடைசி நாள். அன்று மாலை 3 மணிக்கு சின்னம் ஒதுக்கப்படும். ஒரே சின்னத்தை 29 பேர் கேட்டுள்ளதால் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x