மறுவாழ்வுக்கு அரசு உதவ வேண்டும்: பாலியல் பாதிப்புக்குள்ளான பெண் மனு

மறுவாழ்வுக்கு அரசு உதவ வேண்டும்:  பாலியல் பாதிப்புக்குள்ளான பெண் மனு
Updated on
1 min read

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண், தனக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவில் திங்கள்கிழமை மனு செய்தார்.

தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த கவுசல்யா என்ற இளம்பெண் மனு அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனக்கு சொந்த ஊர் பெரியகுளம் அருகேயுள்ள இ.புதுக்கோட்டையாகும். எனது தாய் அமுதாவும் தந்தை டேவிட்டும் நான் பிறந்த சில நாட்களிலேயே பிரிந்து சென்று தனித்தனியே திருமணம் செய்து கொண்டனர். நான் தனித்துவிடப்பட்டேன். என்னை சூசைமேரி என்பவர் பாதுகாத்து வருகிறார். இப்போது எனக்கு 20 வயது பூர்த்தியாகியுள்ளது பள்ளி பிள்ளைகளை வேனில் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தேன். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி சதீஷ்குமார் என்பவர் என்னை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும் எனது கண், மூக்கு, வாய், தலை ஆகிய இடங்களில் கத்தியால் கொடூரமாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்து மயக்கமுற்ற என்னை என் உறவினர்கள் கண்டுபிடித்து அரசு மருத்துவமனையில் சேர்த்து பிழைக்க வைத்தனர். என் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட நிலையில், முகம் கொடூரமாக மாற்றப்பட்டு உணவுக்குக் கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு வழங்கி வாழ வழிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in