

“2 ஆண்டுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 3 மடங்கு உயர்வு”: கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் “தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் திருவிழா”வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்தபடி காணொலி வாழியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, "கடந்த 2021 மார்ச் மாத நிலவரப்படி, சுமார் 2300 ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் மட்டுமே தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் எடுத்த முயற்சிகளின் பலனாக, இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்காகி இப்போது 6800-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது" என்று அவர் கூறினார்.
அரசுப் பள்ளி கதவுகளில் மனிதக் கழிவு பூச்சு: இந்திய கம்யூ. கண்டனம்: திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறைக் கதவுகளில் மனித மலம் பூசப்பட்டதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? - ராமதாஸ் கேள்வி: தமிழக அரசுப் பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றுக்கு நடப்பாண்டில் 10,407 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக மாநாடு - மதுரையில் குவியும் தொண்டர்கள்: மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள அதிமுக மாநில மாநாட்டுக்கு ஏற்பாடுகள் தயாராகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் நடைபெறும் மாநாட்டுக்கான மேடை, பந்தல், தொண்டர்களுக்கு உணவு வழங்கும் இடம், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. மாநாட்டுப் பந்தல் வளாகத்தில் 3 லட்சம் தொண்டர்கள் நாற்காலிகளில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டு நிகழ்ச்சிகள் எல்இடி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. பந்தலைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. காலை 7.45 மணிக்கு 51 அடி உயர கொடிக் கம்பத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி கட்சிக் கொடியேற்றி, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். ஜெயலலிதா பேரவை மற்றும் பிற அணிகளின் தொண்டர்கள் 3,000 பேர் அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர்.
பின்னர் மாநாட்டுப் பந்தலைத் திறந்துவைக்கும் பழனிசாமி, நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள அதிமுக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மாநாட்டின் பிரதான நிகழ்ச்சிகள் மாலை தொடங்குகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 5 பேர், மதுரை மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் கே.ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் பேசுகின்றனர். பின்னர், பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்புஉரையாற்றுகிறார்.
“ஜனநாயகத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்”: “தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது” என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.
சிஏஜி அறிக்கைக்கு நிதின் கட்கரி விளக்கம்: "துவாராகா விரைவுச் சாலை என்பது சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டியது போல் 29 கிலோ மீட்டர் அல்ல, அது மொத்தம் 230 கிலோ மீட்டர். அதன்படி ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.9.5 கோடி செலவழிக்கப்பட்டது. சிஏஜி அதிகாரிகளிடம் இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. அவர்களும் அந்த விளக்கத்தால் சமாதானம் அடைந்தனர். இருந்தும் அவர்கள் அறிக்கையில் 29 கிலோ மீட்டர் என்றே குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர்" என்று சிஏஜி அறிக்கை குறித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.
துவாரகா விரைவுச் சாலை ஹரியாணாவிலும் செல்கிறது. இங்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.251 கோடி செலவிடப்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18.2 கோடி என்ற சராசரி தொகையைவிட இது பல மடங்கு அதிகமாக செலவிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“அனைத்துத் துறைகளையுமே ஆர்எஸ்எஸ் தான் நடத்துகிறது”: "பாஜகவின் கொள்கை ஊற்றான ஆர்எஸ்எஸ் தான் நாட்டின் அனைத்து துறைகளையும் ஏற்று நடத்துகிறது. இதற்காக ஒவ்வொரு துறையில் ஆர்எஸ்எஸ் சார்புடைய நபர்கள் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுகின்றனர். மத்திய அமைச்சர்களே பலரும் தங்களின் துறைகளை தாங்கள் வழிநடத்தவில்லை மாறாக, ஆர்எஸ்எஸ் சார்புடைய அதிகாரிகள் தான் நடத்துகின்றனர். அவர்கள்தான் எல்லாவற்றையும் பரிந்துரைக்கின்றனர் என்று குமுறுகின்றனர்.
அரசியல் சாசனத்தின் இலக்குக்கு உதவவே அதன் அடிப்படையில் துறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், அந்த அரச கட்டமைப்புகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்களின் ஆட்களை முக்கியப் பொறுப்பில் அமைத்து எல்லாவற்றையும் சிதைக்கிறது" என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
‘பயிற்சி மையங்கள் குற்றம் புரிகின்றன’ - அசோக் கெலாட்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐஐடி - ஜெஇஇ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் பலர் கடந்த சில மாதங்களாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்துவரும் சூழலில் இது தொடர்பான விசாரணைக்கு முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கெலாட், "கோட்டா தற்கொலைகள் தொடர்பாக விசாரணைக் குழு அமைத்துள்ளோம். அந்தக் குழு 15 நாட்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக படிப்புச் சுமை கொடுக்கப்படுகிறது. 9 ஆம் வகுப்பு 10 ஆம் வகுப்பு மாணவர்களை இதுபோன்ற நுழைத்தேர்வு பயிற்சிகளில் சேர்ப்பது தனியார் பயிற்சி மையங்கள் செய்யும் குற்றச்செயலாகும். இளம் சிறார்கள் இப்படியாக தற்கொலையால் இறப்பதை அனுமதிக்க முடியாது. இது நடவடிக்கைக்கான தருணம்" என்றார்.
‘ராகுல் காந்தி அமேதியில் போட்டி’: வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அஜய் ராய் தெரிவித்துள்ளார். அதேபோல் வாரணாசியில் இருந்து போட்டியிட பிரியங்கா காந்தி முடிவு செய்தால் அவருக்கு காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டரும் முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்று கூறியுள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட்டை மாற்ற வேண்டாம்: விஜயகாந்த்:“கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.