

சென்னை: போலீஸாரின் சிறப்பு மருத்துவ நிவாரண உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக காவல் துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல், காவல் ஆய்வாளர் நிலை வரையிலான போலீஸாருக்கு சிறப்பு மருத்துவ நிவாரண உச்ச வரம்பு இதுவரை மொத்த பணிக்காலத்தில் ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் (ஆக. 17) நடைபெற்ற காவலர் சேமநல நிதி கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்த உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து காவலர்களின் மொத்த பணிக்காலத்தில் 3 முறை ரூ.25 ஆயிரம் பெற்றுக்கொள்ள ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது. இந்த தொகையையும் உயர்த்தி காவலர்களின் மொத்த பணிக்காலத்தில் 3 முறை ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம் என ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.